Thursday, January 17, 2019

இதய சுகாதாரம் என்பது மனித வாழ்வுக்கு மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது. இருதய அமைப்பில் அடங்கியுள்ள இதயம் மற்றும் ரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால் போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
உணவுக் கட்டுப்பாடு
உணவுக் கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உயர் இரத்தக் கொழுப்பின் அளவு தமனியில் உள்ள பிளேக் கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லாத் பால், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக் கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஃபைபர், போன்றவை இதயப் பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன.
எடை பராமரிப்பு
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் குறிப்பாக எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு, குறைவான ஹெச்டிஎல் போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதைப் பராமரிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள் வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகு தொலைவில் இருக்கும் கடை, போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்குச் சிறந்த பங்களிப்பாகும்.
வாழ்க்கை முறை
உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் இதயத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யுங்கள். அமெரிக்க இதயச் சங்கம் புகைபிடிப்பதுதான் இதய நோயிற்கு முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாகப் புகைப் பிடிப்பது நுரையீரல் நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஆபத்து அறிகுறிகள்
அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். மூச்சுத் திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், லேசான மயக்கம், போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.
இதய நோய் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட, வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் மாற்றங்களே இதய நோயைத் தவிர்க்கச் சிறந்த வழி. இதயம், காதலிக்க மட்டும் முக்கியமானது அல்ல… உயிர் வாழ்வதற்கும் தான்!.

0 comments:

Post a Comment