நெருக்கடி என்கிற சூழலை யாரும் விரும்புவது இல்லை.
ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் பரம சௌக்கியமானது என்ற மனப்போக்கு நம்முடையது.
ஆனால் நெருக்கடி என்பது ஒரு நல்ல விசயமாகும். எப்படி? இந்தச் கதையைப் படியுங்கள்.
ஜப்பானியர்களுக்கு ‘ஃப்ரெஷ்’ மீன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஜப்பானியக் கடல் பகுதியில் மீன்கள் அவ்வளவாக இல்லை. படகுகள் கடலுக்குள் வெகுதூரம் சென்று மீன்பிடித்துக் கொண்டு திரும்ப வேண்டியிருந்தது.
நீண்ட தூரம் சென்று மீன்பிடித்து வருவதால் எப்படி ஃப்ரெஷ்ஷாக மீன் இருக்கும். ஜப்பானியர்களுக்கு அந்தச் சுவை பிடிக்கவில்லை.
யோசித்தார்கள். மீன்பிடித்து அதனை ஐஸ்பெட்டியில் போட்டுப் பதப்படுத்தி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.
இந்தச் சுவையும் ஜப்பானியர்களுக்கு விருப்பமானதாக இல்லை. எப்படியாவது ஃப்ரெஷ்ஷாக கரைக்கு மீனைக் கொண்டுவர வேண்டும் என்ன செய்வது?
மீன்பிடிக் கப்பலுக்குள் ஒரு பெரிய தொட்டி அமைத்து, பிடித்த மீனை அதனுள் விட்டார்கள். உயிரோடு கரைக்குக் கொண்டு வந்தார்கள். சமைத்தார்கள். பிரச்சனை தீர்ந்ததா? ம்ஹும். தீரவில்லை. இப்போதும் மீன் ருசியாக இல்லை.
எங்கேயோ நடுக்கடலில் பிடித்த மீன் உயிரோடு தானே கரைக்கு வருகிறது. இதற்கு மேல் ஃப்ரெஷ்ஷாக மீனை எப்படிக் கொண்டு வருவது?
பிரச்சனை என்னவென்றால், மீன்தொட்டியும், கடலும் ஒன்றில்லை. அந்த வித்தியாசம் மீன்களுக்குப் புரிந்ததும், அவை அலுத்துப் போய் சும்மா இருந்துவிட்டன. சோர்ந்துபோன மீன்களின் சுவை ஜப்பானியர்களுக்குப் பிடிக்கவில்லை.
எப்படியாவது தொட்டிகளில் உள்ள மீன்களைச் சுறுசுறுப்பாக்க வேண்டும். என்ன செய்யலாம்? நடுக்கடலில் மீன்கள் நடமாடும் தொட்டிக்குள் ஒரு சிறிய சுறாவை விட்டார்கள். சுறா, மீன்களைத் துரத்தி வேட்டையாட முயன்றது. மீன்கள் முன்பைவிட அதிக சுறுசுறுப்புடன் தொட்டியைச் சுற்றிவந்தன. சில மீன்கள் சுறாவிடம் அகப்பட்டு உயிர் இழந்தன. ஆனால் பெரும்பான்மையான மீன்கள் மிகவும் ஃப்ரெஷ்ஷாக இருந்தன. அதன் ருசி ஜப்பானியர்களுக்கு முழு திருப்தியைத் தந்தது.
ஆக, தொட்டியில் சும்மா சுற்றிவருகிற மீன்கள் இலக்கு இல்லாமல், நெருக்கடி எதுவும் இல்லாமல், சமாளிப்பதற்கு சவால் ஏதும் இல்லாமல் போரடித்துப் போய் சோர்ந்துவிட்டன. அந்த மீன்கள் மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு சுறாக்குட்டி என்கிற நெருக்கடி தேவைப்பட்டது.
சராசரி மனிதர்களும் இப்படித்தான். நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் சௌகரியம் என்று சுகமாக சுருண்டு கொள்கிறார்கள். ஆனால் நிஜத்தில், நெருக்கடிகள் தான் நம்மை மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக்கொண்டு வருகின்றன.
0 comments:
Post a Comment