காதலின் மிகப்பெரிய எதிரி உடல் துர்நாற்றம். சமூகத்தில், பொது இடங்களில் கூட உடல் துர்நாற்றம் தர்ம சங்கடத்தை உண்டாக்கும். இதில் துர்ப்பாக்கியம் என்னவென்றால், துர்நாற்றம் உடையவருக்கு, தனது உடலிலிருந்து நாற்றம் வீசுவது தெரியாது. பிறருக்குத்தான் தெரியும்.
உடல் துர்நாற்றத்தை உண்டாக்குவது பாக்டீரியாக்கள். வியர்வையுடன் சேர்ந்து இவை இரண்டு மடங்காக பெருகுகின்றன. வியர்வையை தவிர வேறு காரணங்களாலும் உடல் நாற்றம் ஏற்படும்.
நம் உடலில் தேங்கும் கழிவுகள், நச்சுப்பொருட்கள் இவற்றாலும் உடல் துர்நாற்றம் ஏற்படும். ஆயுர்வேதம் மூன்று விஷப்பொருட்களை அடையாளம் காட்டுகிறது. ஜீரணம் சரிவர ஆகாமல் குடலில் தேங்கி விடும். கழிவு முதலாவது.
இந்த கழிவு வெளியேறாவிட்டால் ஜீரண மண்டலத்தை தவிர உடலின் வேறு இடங்களுக்கு பரவலாம். உபதோஷங்கள், தாதுக்கள் (உடல் திசுக்கள்) இவற்றுடன் சேர்ந்து விஷமாகிறது. இது இரண்டாவது கழிவு.
மூன்றாவது விஷம், சுற்றுப்புற சூழ்நிலையின் மாசுகளால் வருவது. பூச்சி கொல்லிகள், ரசாயன உரங்கள், உணவுப்பொருட்கள், அதிக நாள் நீடிக்க சேர்க்கப்படும் பொருட்கள் ஈயம், அஸ்பெஸ்டோஸ், தண்ணீர் மாசுபடுதல், காற்றில் பரவும் தொற்றுகள் முதலியவற்றாலும் உடலில் விஷப்பொருட்கள் சேரும். உடல் துர்நாற்ற காரணங்களின் பட்டியல்
வியர்வை, வியர்வை சேர்ந்த பாக்டீரியாக்கள், பூஞ்சன தொற்றுகள்.
சிறுநீரகம், கல்லீரல் நோய்கள் பாதிப்புகள். குறிப்பாக சிறுநீரகம் பழுதடைந்தால் யூரியா உப்பு உடலெங்கும் பரவும். இது உடலில் கெட்ட வாசனையை உண்டாக்கும். வயிற்றுக்கோளாறுகளும் மலச்சிக்கல் காரணமாகலாம்.
ஸ்ட்ரெஸ், மனப்பரபரப்பு முதலியன
சர்ம நோய்கள்
பரம்பரை
உடல் சுத்தக் குறைவு
நாட்பட்ட வியாதிகள்
பல் கோளாறுகள் – ஜிஞ்ஜிவைட்டீஸ், சொத்தை
மது, புகை
சில உணவுகள், மருந்துகள்.
உடலில் கழிவுகள் தேங்கி நிற்பதின் அறிகுறிகள் – உடல் கனமானது போன்ற உணர்வு, காலையில் எழுந்திருக்கும் போது கை, கால்கள் விறைத்திருப்பது, சாப்பிட்டவுடனேயே தூக்கம் வருவது, மனக்குழப்பம், மலச்சிக்கல், மூட்டுவலிகள், அடிக்கடி ஜலதோஷம், ஜுரம் வருவது முதலியன.
உடலின் துர் வாசனையை போக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். முன்பே சொன்னபடி, இதனுடன் 500 மி.கி. கோதுமை புல்லை அரைத்து கலந்து குடித்தால் இன்னும் நல்லது.
அக்குள்களை சுத்தமாக வைக்க அவற்றை வினிகர் (வெள்ளை) கலந்த தண்ணீரால் கழுவலாம். முள்ளங்கி சாற்றுடன், கால் டீஸ்பூன் கிளிசரின் கலந்து ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். டியோடிரண்ட்டுகளுக்கு பதில் குழந்தைகளுக்கான பவுடர்களை உபயோகிக்கலாம்.
ஆண்களுக்கு – கடுக்காய் தோல், கோரைக் கிழங்கு, சிறுநாகப் பூ, விளாமிச்சை வேர், லோத்ரா பட்டை, நீல அல்லி, மஞ்சள் – இவற்றை பொடித்து, பவுடருடன் கலந்து உடலில் தடவிக் கொண்டால் துர்நாற்றம் போகும். பெண்கள் சந்தனம், விளாமிச்சை வேர், வெட்டிவேர், இலந்தை விதை, அகில், சிறுநாகப்பூ இவற்றின் தூளை உடலில் தடவிக் கொண்டு குளித்தால் கெட்ட வாசம் மறையும். மாதுளம் பட்டை, லோத்ரா பட்டை, தாமரை இதழ், வேப்பிலை இவற்றையும் பொடித்து, குளியலுக்கு முன் தடவி குளிக்கலாம். பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, விலாமிச்சை வேர், பூலாங்கிழங்கு இவற்றை சமஅளவு எடுத்துக் கொண்டு பொடித்து கலந்து குளியலுக்கு பூசி கொள்ள உடல் நறுமணம் வீசும்.
முந்தைய அத்தியாயத்தில் வியர்வை நாற்றம் விலகிட கொடுத்துள்ள குறிப்புகளை பார்க்கவும்.
வாசனைப் பொருட்கள், சென்ட்டுகள் உடல் துர்நாற்றத்தை மறைக்க தொன்று தொட்டு வாசனை வீசும் பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையாகவே மனித உடலில் பாலுணர்வை தூண்டும் வாசனை சுரப்பிகள் இருந்தாலும், பாலூட்டி இனத்தை சேர்ந்த சில விலங்குகளில் உள்ள வாசனை சுரப்பிகள் சக்தி வாய்ந்தவை. உதாரணம் கஸ்தூரி மான்கள். ஆண் கஸ்தூரி மான்களின் அடிவயிற்றில் அமைந்திருக்கும் சுரப்பியிலிருந்து வீசும் நறுமணம், 2 கிலோ மீட்டர் வரை பரவி, பெண் மானை ஈர்க்கும்.
கஸ்தூரிக்காக மானைக் கொன்று, அடிவயிற்று சுரப்பி முழுவதும் எடுக்கப்படுகிறது. இதை உலர்த்தி, பொடியாக்கி, வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
புனுகு, ஆப்பிரிக்கா, இந்தியாவில் காணப்படும் புனுகுப் பூனைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆண், பெண் இரு பாலிலும், புனுகு சுரப்பிகள் இருக்கும். புனுகை எடுக்க, புனுகுப் பூனைகளை கொல்ல தேவையில்லை. அதன் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிற புனுகை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.
புனுகு கஸ்தூரியை விட மலிவானது. திருமாலுக்கு மிகவும் உகந்தது என்று கருதப்படுவதால், திருப்பதி தேவஸ்தானம் சில புனுகுப் பூனைகளை வளர்த்து வருவதாக கேள்வி.
மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்காக அடிப்படை தைலத்தை எடுப்பது சிறிது கடினமானது. ரோஜா, லாவண்டர், மல்லிகை முதலியன இதற்கு வெகுவாக பயனாகின்றன. சந்தனம், குங்குமப் பூ இவைகளும் ‘சென்ட்’ தயாரிப்பில் உபயோகமாகும் நறுமணப்பொருட்கள்.
ரோஜாவிலிருந்து அத்தர் தயாரிப்பதை கண்டுபிடித்தவர், முகலாய ராணி நூர்ஜஹான் எனப்படுகிறது.
அன்றும் இன்றும் அத்தர் தயாரிப்பில் முக்கிய தொழிலாக கொண்டிருக்கும் நகரம் உத்திர பிரதேசத்தில் உள்ள கன்னோஜ். ராஜா ஹர்ஷ வர்த்தனர் வாசனைத் திரவியங்களை உபயோகித்து வந்ததால் அவர் இந்த தொழிலை ஊக்குவித்ததாக சரித்திரம் சொல்கிறது. கன்னோஜில் தயாரிக்கப்படும் ரூ குலாபி அத்தரின் விலை10 கிராமிற்கு ரூ. 3500/-! இதர அத்தர்கள் 10 கிராமுக்கு ரூ. 150/- ல் கூட கிடைக்கின்றன. இவை 2007 ம் வருடத்தின் விலைகள். தற்போது அதிகமாகியிருக்கலாம்.
வாசனை திரவியங்களை தயாரிக்க உதவும் தாவரங்கள்
மலர்கள் – ரோஜா, மல்லிகை, லாவண்டர், பழமரபூக்கள் ஆரஞ்சு
பழங்கள் – ஆப்பிள், ஸ்ட்ராபெரி, செர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, வெனிலா
இலை, பட்டைகள் – இலவங்கம், சேஜ், சிட்ரஸ், ரோஸ்மேரி, மருதோன்றி
வேர்கள் – வெட்டி வேர், இஞ்சி
விதைகள் – தனியா, ஜாதிபத்திரி, ஏலக்காய், சோம்பு, ஜாதிக்காய், தனியா
மரங்கள் – சந்தனம், அகில், பைன், ரோஸ்வுட் முதலியன. நறுமணம் ‘வீசும் சென்டுகள்’ வீரியம் மிக்கவை, ஒரு
முனைப்படுத்தப்பட்டவை. இந்த சென்டுகள் உடல் நாற்றத்தை மறைக்க உதவும். கோடைக்காலத்தில் மல்லிகை, அத்தர், பன்னீர் இவைகளை தடவிக் கொண்டால், உடல் சிறிது குளிர்ச்சியடையும். ஆனால் சென்டை விட அவை தயாரிக்க பயன்படும் வாசனை தைலங்கள் மலிவானவை, உடலுக்கு உகந்தவை. இந்த தைலங்களால் சோப், மெழுகுவர்த்தி குளியல் எண்ணைகள் முதலியன தயாரிக்கப்படுகின்றன.
சென்டுகளால் சில பாதிப்புகள் ஏற்படலாம். அவை
அலர்ஜி – ஒவ்வாமை – தோலில் அரிப்பு, நமைச்சல் ஏற்படலாம்.
தும்மல் உண்டாகலாம்.
தோல் பாதிப்புகள் ஏற்படலாம்.
வாசனை பொருட்கள்
நறுமணம் தரும் சென்ட்டுகள் மனோநிலையை உற்சாகப்படுத்தும். வியர்வை துர்நாற்றம் பிடிக்காமல் போகலாம். ஆனால் இயற்கையான, பாக்டீரியா தாக்கப்படாத வியர்வை பெண்களை ஈர்க்கும்.
ஆணின் பாலியல் ஹார்மோனான பெரோமோன் பெண்களை, குறிப்பாக கருத்தரிக்கும் நிலையில் இருக்கும் பெண்களை, ஈர்க்கும். பெரோமோனில் ஒன்றான உடல் ஹார்மோன் ஆன்ட்ரோஸ்டெனால் புத்தான வியர்வையால் உண்டாக்கப்படுகிறது. ஆண் பெண் ஒருவரை ஒருவர் கவரும் காரணம் பெரோமோன் ஹார்மோன்கள். இந்த ஹார்மோன் சிலருக்கு அதிகமாக சுரக்கும். சிலருக்கு குறைவாக சுரக்கும். எனவேதான் ஆண்கள் பெரோமோன் உள்ள வாசனைப் சென்டை உபயோகிப்பதின் மூலம் பெண்களை ஈர்ப்பதில் முனைகின்றனர்.
பெண்களுக்கு பிடித்தமான சென்ட்டுகள் – பூக்களின் சாறு வசீகரதன்மை வாய்ந்த பட்டைகளின் சென்ட்டுகள், அடிப்படை வாசனை தைலங்கள், காட்டுப்புல்களின் சாறு முதலியன. இலவங்கப்பட்டை வெனிலா ஸ்ப்ரேகள், கஸ்தூரி இவை பெண்களின் காதல் உணர்ச்சிகளை தூண்டிவிடும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.