Wednesday, December 5, 2018



மனித சமுதாயம் எவ்வளவு தொன்மையானதோ, அவ்வளவு தொன்மையானது. விளையாட்டுகள். மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. விளையாட்டுகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயல்.
மனிதன் இனக்குழுவாக ஒன்று சேர்ந்து வாழத் தலைப்பட்ட போதே விளையாட்டு ஒரு சமுதாய நிறுவனமாக உருவாகியுள்ளதென்று கூறுகின்றனர். இது மனிதனின் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, உடநலம், மனநலம் பேணுபவையாகவும் உள்ளன. வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கும் களம் என்றும் இதனைக் கூறுவர்.
மனிதன் இன்றைய நிலையை அடைவதற்கு முன்பு பல்வேறு நிலைகளை, பல்வேறு காலக்கட்டங்களில் கடந்து முன்னேறியுள்ளான். வேட்டையாடி வாழ்ந்த காலத்திலும், நிலைத்த வாழ்வு வாழத்தொடங்கிய போதும் வேட்டை, போர் போன்றவற்றில் ஈடுபட்டான். அதற்கெனப் பல பயிற்சிகளில் ஈடுபட்டான். சமுதாய மாற்றத்தின் காரணமாக அப்பயிற்சிகள் விளையாட்டுகளாக உருவாயின.
விளையாட்டு என்பது அமைப்பினை உடையதாக இருக்க வேண்டும். போட்டியினை ஏற்படுத்தும் ஆட்டமாக இருக்க வேண்டும். வெற்றியினை நிர்ணயிக்கும் விதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்விதிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். பின்னர், விளையாட்டுக்களின் அடிப்படையான இயல்புகள், அதன் பயன்கள், விளையாட்டிற்கான காரணங்கள் பற்றிய கொள்கைகள் உருவாகியுள்ளன.
1. மிகை ஆற்றல் கொள்கை
(Surplus Energy theory)
2. ஆயத்தக் கொள்கை
(Preparatory theory)
3. புனராக்கக் கொள்கை
(Recapitulatory theory)
4. பொழுதுபோக்குக் கொள்கை
(Recreation theory)
5. காதலுதற் கொள்கை
(Cathartic theory)
6. போட்டி மனப்பான்மை
(Rivalry)
நாட்டுப்புற விளையாட்டுகள் :
நாட்டுப்புறவியலின் ஒரு கூறாக நாட்டுப்புற விளையாட்டு உள்ளது. நாட்டுப்புற விளையாட்டுக்கள் நாட்டுப்புற மக்களின் மன இயல்பிற்கேற்ற மனமகிழ்ச்சியினைத் தருகின்ற ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். நாட்டுப்புற மக்களின் உடல்நலத்திற்காகவும், மன நலத்திற்காகவும், மன மகிழ்ச்சியூட்டும் செயலிற்காகவும், பொதுபோக்கிற்காகவும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்காகவும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் இது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளையாட்டுகளின் வகைகள் :
1. விளையாட்டுக்களை அதன் நிலையினைக் கொண்டு,
I. வீர விளையாட்டுக்கள்
II. பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்
என இருவகையாகப் பகுக்கலாம்.
வீர விளையாட்டுக்கள் :
விற்போர், மற்போர், சிலம்பம், சடுகுடு, மஞ்சுவிரட்டு போன்றவை வீர விளையாட்டுக்களாகும்.
பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் :
சொக்கட்டான், பந்தாட்டம், அம்மானை, பொம்மை, சீட்டாட்டம் போன்றவை பொழுதுபோக்கு விளையாட்டுக்களாகும்.
மஞ்சுவிரட்டு, கோழிச்சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்றவைகளை சில விழாச் சடங்குகளில் விளையாடுவதால் சடங்கு சார்ந்த விளையாட்டுக்கள் என்றும் கூறுவர்.
2. விளையாட்டுக்களை விளையாடும் இடத்தின் அடிப்படையில்.
I. அக விளையாட்டுக்கள் அல்லது உள்ளரங்க விளையாட்டுக்கள்
II. புற விளையாட்டுக்கள் அல்லது வெளியரங்க விளையாட்டுக்கள்
எனப் பிரித்தறியலாம்.
அக விளையாட்டுக்கள் :
தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், பருப்பு கடைதல், சொல் விளையாட்டு, சங்கிலி, விடுகதை சொல்லுதல் போன்றவை அக விளையாட்டுக்களாகும்.
புற விளையாட்டுக்கள் :
சிலம்பம், சடுகுடு, சல்லிக்கட்டு, உறியடித்தல், இரட்டை மாட்டுப் பந்தயம், பம்பரம், குண்டு, காற்றாடி, கிளித்தட்டு போன்ற நிறைய விளையாட்டுக்களை புற விளையாட்டுக்களாகக் கூறலாம்.
3. விளையாட்டுக்களில் பங்குபெறுவோர் அடிப்படையில் விளையாட்டுக்களை,
I. தனிநபர் விளையாட்டுக்கள்
II. இருவர் விளையாட்டுக்கள்
III. குழு விளையாட்டுக்கள்
என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
4. விளையாட்டுக்களில் அமைந்துள்ள பாடல்களின் அடிப்படையில் இதனை,
I. பாடலுள்ள விளையாட்டுக்கள்
II. பாடலில்லா விளையாட்டுக்கள்
என்று இருவகைப்படுத்தலாம்.
சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம் கழங்கு ஆட்டம், கண்ணாமூச்சி போன்ற சில விளையாட்டுகளில் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். இவைத்தவிர ஏனைய விளையாட்டுக்களைப் பாடலில்லா விளையாட்டுக்கள் என்பர்.
5. விளையாட்டினைப் பால் மற்றும் வயது அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்துவர்.
I. ஆடவர் விளையாட்டுக்கள்
II. மகளிர் விளையாட்டுக்கள்
III. சிறுவர் விளையாட்டுக்கள்
IV. சிறுமியர் விளையாட்டுக்கள்
V. சிறுவர் சிறுமியர் சேர்ந்தாடும் விளையாட்டுக்கள்
6. நாட்டுப்புற விளையாட்டுக்களை மானிடவியலாளர் மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.
I. உடல் திறன் விளையாட்டுக்கள்
II. மனத்தந்திர விளையாட்டுக்கள்
III. வாய்ப்பு நிலை விளையாட்டுக்கள்
ஆண்கள் விளையாட்டுக்கள் புற விளையாட்டுக்களாகவும், உடல்திறன், அறிவுத்திறன் வாய்ந்த விளையாட்டுக்களாகவும் உள்ளன. மகளிர் விளையாட்டுக்கள் பெரும்பாலும் அக விளையாட்டுக்களாக உள்ளன. சிறுவர், சிறுமியர் விளையாட்டுக்கள் பெரும்பாலும் ‘போலச் செய்தலை’ அடிப்படையாகக் கொண்டவை. சிறுவர், சிறுமியர் உடல்திறன் மனமகிழ்ச்சி சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சிறுமியர்கள் மென்மையான விளையாட்டுக்களையே பெரிதும் விரும்புகின்றனர்.
ஆண்கள் விளையாட்டுக்கள் அறிவுத்திறனும், உடல்திறனும் கொண்டவைகளாக உள்ளன. பெண்கள் விளையாட்டுக்கள் மனமகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்குடையவைகளாக இருக்கின்றன. நாட்டுப்புற விளையாட்டுக்கள் ஒரு அமைப்பிற்குட்பட்டவைகளாகும். அவைகளைச் சில செயல்களின் தொகுப்பு என்றும் கூறலாம்.
நமது சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் விளக்கவல்லன நமது நாட்டுப்புற விளையாட்டுக்கள். உளவியல் வழியாக நோக்கும்போது இவ்விளையாட்டுக்கள் மனதைப் பாதுகாக்கின்ற, ஒரு வடிகாலாக செயல்படுகின்றன. பகைவர்களிடமிருந்து பாதுகாக்கும் பயிற்சி முறையாகவும், மருத்துவ முறையாகவும் உள்ளன. சமயம் சார்ந்த சடங்காகவும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறாகவும் விளங்குகின்றன.
எந்த ஒன்றும் தோன்றிய நிலையில் இருத்தல் இயலாது என்பது விதி. நாட்டுப்புற விளையாட்டுக்களும் இதற்கு விதி விலக்கல்ல. அதேபோல விளையாட்டுகளும் பருவத்திற்கேற்ப விளையாடுபவர்களுக்கேற்ப மாறியும், அறிவியல் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கேற்ப திரிந்தும் அமைகின்றன.

0 comments:

Post a Comment