நிமிர்ந்த நடையோடு கையில் ஏந்திய பறையை சக்தியுடன் இணைந்து அடித்ததில் கிழிந்தது ஆணவமும், அவதூறு சொற்களும்.
இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?”- போகிற போக்கில் உதிர்க்கப்படுகிற இந்தக் கேள்வியின் முகத்தில் அறைகிற ஒரு உதாரணம் தான், உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவக் கொலை.
2016-ம் ஆண்டு அனைத்து ஊடகங்களிலும் இளம் தம்பதியின் புகைப்படம் ஒன்று பரபரப்புடன் காட்டப்பட்டது. காதலித்த நபரையே கரம்பிடித்த மகிழ்ச்சியும் பதற்றமும் கலந்திருந்தது அந்தத் தம்பதியின் முகத்தில். இந்தப் புகைப்படத்துடன் இணைந்து ஒரு சிசிடிவி காட்சியும் வேகமாகச் சமூக வலைத்தளங்களில் பரவியது.
கௌசல்யா – சங்கர் ஆணவக் கொலை தாக்குதல்
சாலையில் சென்று கொண்டிருந்த இளம் ஜோடியை ஒரு சாதி வெறி கும்பல் சுற்றி வளைக்கிறது. முதலில் கீழே தள்ளப்படுகிறார் அந்த இளைஞர். என்ன நடக்கிறது என்று சுதாகரிப்பதற்குள் அரிவாளால் தாக்கப்படுகிறார். பதறிப் போகிறாள் அந்த இளம் பெண். கண் சிமிட்டும் நேரத்தில் கீழே தள்ளப்பட்டு அவள் மீதும் பயங்கர தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.

கௌசல்யா-சங்கர் திருமணம் புகைப்படம்
சில வினாடிகளிலேயே இளம் ஜோடியை வெட்டிச் சாய்த்த அந்தக் கும்பல் அங்கிருந்து எதையோ சாதித்தது போல கிளம்பிச் செல்கிறது. அன்று உலகிற்கே அறிமுகமாகின்றனர் கௌசல்யா-சங்கர். பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த கௌசல்யா, இரத்த வெள்ளத்தில் இறந்திருக்கும் தனது கணவரைப் பார்த்து துடி துடித்து போகிறார். சங்கர்… ஆணவக் கொலைக்கு பலியானார்.
சாதிவெறி தாக்குதலுக்கு எதிராக கௌசல்யா
2016ம் ஆண்டு கணவன் இறந்த சோகத்தில் வெட்டுக் காயங்களுடன் கலங்கி நின்ற கௌசல்யா வேறு, இன்று இருக்கும் கௌசல்யா முற்றிலுமாக வேறு. யார் தம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் வருவான் என்று நினைத்தோமோ அவனையே சாதி கொன்றுவிட்டது, ஆதலால் சாதி ஒழிப்பிற்கான பணிகளுக்கே எனது முன்னுரிமை என்று சங்கரின் குருதி வெள்ளத்தில் இருந்து உதித்தெழுந்தாள் கௌசல்யா.

கௌசல்யாவும் சங்கரின் குடும்பத்தினரும்
படிப்படியாக கௌசல்யாவுக்குள் ஏற்பட்ட தெளிவும் பக்குவமும் கண்கூடாக பார்க்க முடிந்தது. சமூகத்தில் சாதியால் பாதிக்கப்பட்ட பலருக்கும், ஆணவக் கொலை எங்கெல்லாம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் சாதிக்கு எதிரான ஆதரவு கரம் நீட்டினார். பெற்றோர்கள் என்ற தயக்கம் எதுவுமில்லாமல் “குற்றவாளிகளைக் குற்றவாளிகள் என்று தானே சொல்ல வேண்டும்” என்றார்.

2017ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அப்போதும் கலங்காமல், சங்கரின் மரணத்திற்குக் கிடைத்த நீதி என்று தீர்ப்பை கொண்டாடினார்.
ஆணவ கொலைக்கு எதிராக இவரின் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. 18 வயது மீறியவர்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்திலேயே இடம் இருந்தும் சமூகத்தில் இடம் இல்லாமல் போனது கௌசல்யாவிற்கும் – சங்கருக்கும்.
கௌசல்யா மறுமணம்
தினந்தோறும் பல போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்து வந்தபோதும், இவரின் வாழ்வில் மகிழ்ச்சியை செழிக்கச் செய்ய நடந்தேறியது மறுமணம். கோவை பெரியார் படிப்பகத்தில் கௌசல்யா நேற்று மறுமணம் செய்து கொண்டார். நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் இணைந்து உறுதிமொழி ஏற்று, ஒருவரை ஒருவர் ஏற்றுத் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் சங்கரின் பாட்டி, தாத்தா மாலை எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார்கள்.

பொதுவாகவே பெண் என்பவளை, அர்த்தமற்ற விதிமுறைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது சமூகம். அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து முன்னேறத் தொடங்கினாலும், மறுமணம் என்பது பெண்களுக்கு மற்றொரு சவாலாகவே அமைகிறது.
மனைவி இறந்தாலோ, பிரிந்தாலோ கணவனுக்கு நடக்கும் மறுமணம் ஒரு அடிப்படைத் தேவை எனக் கூறும் பலர், ஒரு பெண்ணிற்கு நடத்தால் பாவமாக கருதுகின்றனர். குறிப்பாக விவாகரத்து பெற்ற பெண்களோ அல்லது பெண்ணின் கணவர் இறந்து ஒரு சில வருடத்திலேயே அவள் மறுமணம் செய்யும்போது அந்தப் பெண்ணை அவதூறு கருத்துகளால் வாட்டி வதைக்கிறது சமூகம்.


ஆனால் இத்தனை ஏளன பேச்சுகளும் நேற்று கௌசல்யாவிற்கு வந்தபோதும், நிமிர்ந்த நடையோடு கையில் ஏந்திய பறையை சக்தியுடன் இணைந்து அடித்ததில் கிழிந்தது ஆணவமும், சமூக இழிவுகளும், அவதூறு சொற்களும்.
குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வந்த கௌசல்யா, மாற்றுச் சமூகத்தை சேர்ந்த சங்கரின் திருமணக் கனவுகளை சாதி உடைத்தெறிந்தாலும், நேற்று நடந்த மறுமணத்தில் சாதிக்கு எதிராகச் சக்தியும் கௌசல்யாவும் கரம் கோர்த்திருப்பது நெகிழ்ச்சி தருணமே.
தோற்றத்தால் மட்டுமல்லாது சிந்தனையிலும் மாற்றங்கள் காட்டி, ஒரு சமூக செயற்பாட்டாளராக வலம் வரும் கௌசல்யா, மாற்றத்தின் சிகரம்.
0 comments:
Post a Comment