
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், இஹஸ்ஸானுல்லாஹ். இவரின் மகள் ஹனீப்பா ஜாரா (7). இரண்டாம் வகுப்பு படிக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், இவர்களது வீட்டில் கழிவறை வசதி இல்லை. ஆனாலும், சுகாதாரம் பற்றி சிறு வயதிலேயே மாணவி ஹனீப்பா ஜாராவுக்கு விழிப்புஉணர்வு இருந்ததால், அவர் தன்னுடைய தந்தையிடம் கழிவறை கட்டுமாறு கூறினார்.
வகுப்பில் முதல் ரேங்க் எடுத்தால் கழிவறை கட்டித்தருவதாகக் கூறிய இஹஸ்ஸானுல்லாஹுக்கு தலைக்கு மேல் கடன். இதனால், கழிவறை கட்ட முடியவில்லை. பொறுத்துப் பார்த்த மாணவி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று, தந்தைமீது புகார் அளித்தார். ‘கழிவறை இல்லாதது எனக்கு அவமானமாக இருப்பதாக’ மாணவி கூறினார்.மாணவியின் மன தைரியம், திறந்த வெளியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வு மீது அவருக்கு உள்ள உறுதியைப் பார்த்து போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பாராட்டினர்.
இதையறிந்த கலெக்டர் ராமனும் மாணவியின் செயல்பாடுகளை வியந்து பாராட்டி, அவரது வீட்டுக்கு உடனடியாகக் கழிவறை கட்டித்தர நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.அரசுத் திட்டத்தில் மாணவியின் வீட்டுக்கு ஒரே நாளில் அதிரடி நடவடிக்கையாகக் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவி ஹனீப்பா ஜாராவை கௌரவிக்கும் வகையில், ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விழிப்புஉணர்வுத் தூதுவராக (பிராண்ட் அம்பாசிடர்) நியமித்து, நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment