Wednesday, April 24, 2019


தலையணை மந்திரம்

வீட்டை விட்டு வெளியே போய்விட்டேன். இரண்டு தெருக்களை கடந்த பிறகு கோபம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்று கவனித்தேன்.

 வழக்கம் போல பூங்காவை நோக்கித்தான். அதுவும் நல்லதே என்று நினைத்துக்கொண்டேன்.

என் மனைவிக்கும் எனக்கும் சண்டை ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கல்யாணமாகி மூன்று வருஷங்கள் ஆகிறது.

 முதல் வருஷம் அருமையாகத்தான் போனது. அப்புறம்தான் சண்டை சச்சரவு ஆரம்பித்தது. விஷயம் ஒன்றுமில்லை. நீயா நானாதான்! எதை எடுத்தாலும் நேர் எதிர் கருத்தை சொல்லுவதை என் மனைவி வழக்கம் ஆக்கிக்கொண்டு இருக்கிறாள்.

நான் காபி போடு என்றால் அவள் டீ தான் நல்லது என்பாள். நான் கோவிலுக்கு போகலாம் என்றால் அவள் கடைக்குப் போகலாம் என்பாள். புரிகிறதல்லவா?

வெறுத்துப்போயிருக்கிறேன். இப்போதெல்லாம் சண்டை அதிகமானால் வீட்டை விட்டுக்கிளம்பி நடக்க ஆரம்பித்து விடுகிறேன்.

 இது கோபத்தை குறைக்கும் என்று உணர்வு சார் நுண்ணறிவு வலைப்பூவில சொல்லி இருக்கிறார்கள்.

பூங்காவை நெருங்கின போது என் மச்சினன் ராமைப்பார்த்தேன்.

சிரித்துக்கொண்டே "என்ன வழக்கம் போல சண்டையா?” என்றான்.

“ஆமாய்யா ஆமா!” என்றேன் கடுப்புடன்.

 கொஞ்சம் சீரியஸாக "அதுக்குத்தான் அந்த யோகா லெக்சருக்கு வான்னு சொன்னேன். அதை நினைவுப்படுத்தத்தான் கிளம்பினேன். இன்னும் கால் மணியில் ஆரம்பிக்கப்போறது" என்றான்.

ஆஹா! ஆமாம் மறந்தே போனேன்.

 “சரிதான். இன்னும் கொஞ்சம் நடந்துவிட்டு வரேன். நீ போ" என்றேன்.

 "சரி நான் அக்காவை பாத்துட்டு போறேன். சீக்கிரமா வா. அவர் கரெக்டா நேரத்துக்கு ஆரம்பிச்சுடுவார்.

வழக்கம் போல முடியற நேரத்துக்கு வராதே" என்று சொல்லிய படி அவன் கிளம்பிப்போனான்.

ஹும்! ரொம்பத்தான் கிண்டலா போச்சு. நான் எப்பவும் இப்படி லேட்டா வரதா குற்றச்சாட்டை பலரும் வைக்கிறார்கள்.

நான் என்ன வேண்டும் என்றா அப்படி செய்கிறேன்? எல்லாருக்கும் நான் என்றால் இளப்பமாக இருக்கிறது!

நினைவுகளில் மூழ்கியபடி பார்க்கில் சுற்றிவிட்டு நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று நினைத்த போது நேரமே ஆகிவிட்டது.

 ஹாலுக்கு போன போது உரை முடிந்து கேள்வி பதில் ஆரம்பித்து இருந்தது. நல்ல கூட்டம். நன்றாக விஷயம் தெரிந்தவர் போலிருக்கிறது.

யாரோ ஒரு ஆசாமி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார். “என் பையன் நாங்க என்ன சொன்னாலும் எதிர்மாறாத்தான் செய்யறான். படிடான்னா கேக்கறதே இல்லே! எப்பப்பாத்தாலும் விளையாட்டுதான். என்ன செய்யறதுன்னே புரியலை!” கொஞ்சம் விட்டால் அழுது விடுவார் போல் இருந்தது.

யோகா மாஸ்டர் பதில் சொன்னார்.

“இப்போதெல்லாம் இந்த பிரச்சினையை நிறைய பேர் சொல்லுகிறார்கள். இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்வதை ஏற்பதில் மனத்தடை இருக்கிறது. ஒன்று செய்யுங்கள்.

அவன் தூங்கின பிறகு அவனிடம் மெதுவான குரலில் சொல்லுங்கள்.

உன் அப்பாவுக்கு உன்னைப்பத்திதான் கவலை. எல்லாமே உன் நல்லதுக்குத்தான் செய்கிறார். உன் நல்லதுக்குத்தான் சொல்கிறார். அவர் பேச்சை கேட்டு நடந்தா உனக்கு நல்லது.

 ஒருவர் தூங்கின பிறகு மனத்தடை இருப்பதில்லை என்பதால் இப்படிச்சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்!”

உம்! இப்படி எல்லாம் வழி இருக்கிறதா?

 நேரம் முடிந்தது என்று சொல்லி நன்றி சொன்னார்கள்.

 வாசல் அருகில் உட்கார்ந்து இருந்ததால் சட்டென்று எழுந்து வந்துவிட்டேன். வரும் வழியில் கேட்டதைப்பற்றி கொஞ்சம் யோசித்துக்கொண்டே வந்தேன்.

ஒரு திட்டம் உருவாகிக்கொண்டு இருந்தது.

வீட்டை அடைந்த போது கதவு பூட்டி இருந்தது. என்னடா இது என்று திகைத்துப்போனேன். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது மனைவி வந்துவிட்டாள்.

"வெள்ளிக்கிழமையாச்சேன்னு கோவிலுக்குப்போனேன். பக்கத்து வீட்டில சாவி கொடுத்து இருந்தேனே?” நான் ஒன்றுமே பேசவில்லை.

இரவு உணவை முடித்துவிட்டு வழக்கம் போல சீக்கிரம் படுக்காமல் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தேன்.

மனைவி கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தாள். கொஞ்சம் கவலையும் இருக்கிறதோ? என்ன ஆச்சு இவனுக்கு இன்னும் படுக்கப்போகலையே என்று யோசித்துக்கொண்டு இருப்பாள். யோசிக்கட்டும்.

ஆனால் வழக்கமான நேரத்துக்கு தூக்கம் கண்களை அழுத்தியது. சரியென்று படுக்கைக்குபோய்விட்டேன். கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம்.

இவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்துவிடுவாள். படுத்தவுடனே தூங்கிவிடுவாள். வரம் வாங்கி வந்து இருப்பாள் போலிருக்கிறது.

இவள் தூங்கியதும் நம் திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டியதுதான். இப்படி நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது.

லேசாக குறட்டை சத்தம் கூட காதில் விழுந்தாற்போலிருந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன்.

அருகில் மனைவியின் குரல் மிருதுவாக கேட்டது.

“உங்க மனைவிக்கு உங்களைபத்திதான் கவலை. எல்லாமே உங்க நல்லதுக்குத்தான் செய்கிறார். உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறார்.

அவர் பேச்சை கேட்டு நடந்தா உங்களுக்கு நல்லது. இனிமே அவர் சொல்கிறதை மறுக்காம ஒத்துகிட்டு செய்யுங்க."

0 comments:

Post a Comment