Tuesday, June 18, 2019

வில்லுப்பாட்டு
--------------------
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி போன்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, திருவிழாக் காலங்களில் கோவில்களில் நடத்தப்படுகிறது. இதில் சாதாரண மக்களுக்கு புரியும் வகையில், பேச்சு மொழியில் கடவுள்களின் வரலாற்றை இசைப்பார்கள். கிராமங்களில் சிறு தெய்வங்களுக்கு நடத்தப்படும் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டே பிரதானமாக இருக்கும். 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரசப் புலவர் இதனை உருவாக்கியவர் என்றும், அருதக்குட்டிப் புலவரே வில்லிசையை தருவித்தவர் என்றும் இரு கருத்து நிலவுகிறது. வில்லுப்பாட்டின் எளிமை, இனிமை போன்றவை நம்மை ஈர்க்கும். வில்லிசைக் குழுவில் வலது பக்கப் பாட்டுக்காரர், பின்பாட்டுக்காரர், குடம் அடிப்பவர், ஆர்மோனியம் வாசிப்பவர், தபேலா இசைப்பவர், ஜால்ரா அடிப்பவர், ஒடுக்கு அடிப்பவர் என ஏழு பேர் அங்கம் வகிப்பர்.

வில்லை வளைச்சு
அம்பை மாட்டினா
சொல்லும் செயலாகும் - தம்பி
சொல்லும் செயலாகும்
என்ற நாட்டார் பாடல், இக்கலைக்கு வில்லுப்பாட்டு என்று பெயர் வர காரணமாக கூறுகிறது.


                        

வில்லுப்பாட்டுக் கலைக்குத் தேவைப்படும் கருவிகளில் மூலக்கருவியாக கருதப்படுவது விற்கதிராகும். இது பனங்கம்பு, பிரம்பு அல்லது முங்கில் வகைகளால் செய்யப்படுகிறது. இதன் இரண்டு முனைகளிலும் வண்ணத் துணிகள் கட்டப் பட்டிருக்கும். இந்த இரண்டு முனைகளைவும் இழுத்து நாண் கட்டப்பட்டு, இரு பக்கமும் பக்கத்திற்கு நான்கு என இரும்பு வளையம் பொறுத்தப் பட்டிருக்கும். கதைகளை ஆவேசமாக வெளிப்படுத்த உதவுவது உடுக்கு கருவி.
சிறு தெய்வக் கதைகளே பெரும்பாலும் பாடப்படுகிறது. அய்யனார், நீலி, சுடலைமாடன்; மேலும் சீதா கல்யாணம், கிருஷ்ணன் கதை; கலப்பு மணம், சாதி தீங்கை  சொல்லும் முத்துப்பட்டன், தோட்டுக்காரியம்மன், வன்னியடி மறவன் போன்ற சமுதாயக் கதைகளும்; ராஜாக்கள் கால கதைகளில் ஐவர் ராஜாக்கள் கதை, இரவிக் குட்டிப் பிள்ளை போர் போன்றவை அதிகமாக பாடப்படுகின்றன. கோவில்களில் மட்டுமே பாடப்பட்டு வந்த இக்கலை, பின்பு பொது மேடைகளிலும் பாடப்பட்டது. பொதுவுடைமை மேடைகளில் பிரசார சாதனமாக இக்கலை பயன்படுத்தப்பட்டது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தோவானை சுந்தரம் பிள்ளை, புன்னார்குளம் கோலப் பிள்ளை போன்றவர்களால் வில்லுப்பாட்டு திரைப்படத் துறையிலும் தன் தடம் பதித்தது. கலைவாணர் தனது வில்லுப்பாட்டில் பழைய உடுக்கு, குடம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஆர்மோனியம், டோலக், பம்பை, கிளாரினட் பயன்படுத்தியதுடன், வில்லுப்பாட்டுக்கே உரிய சோக ரசத்தை மாற்றி, தன்னியல்பான நகைச்சுவையாக பாடினார். சாத்தூர் பிச்சைக் குட்டியின் வில்லிசைக்கு தனி மவுசு உண்டு. நட்சத்திரக் கலைஞர் அவர். பழைய பாரம்பரியத்துடன் நவீன உத்திகளை வில்லுப்பாட்டில் புகுத்தியவர் செவல்குளம் தங்கையா புலவர் ஆவார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சீடர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு குழு, தற்பொழுது நவீன வில்லுப்பாட்டுக் குழுவாக திகழ்கின்றது. கலைமாமணி ராஜலட்சுமி, நெல்லை பாக்கிய லட்சுமி, சுப்பராயபுரம் வேல்கனி போன்ற பெண் கலைஞர்களும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். வில்லிசையில் இன்னும் பல கலைஞர்களை நினைவு கூறவேண்டும்.

0 comments:

Post a Comment