Thursday, March 14, 2019




1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.
2. ரத்தத்தில் சர்க்கரை அளவு
சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு
சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். 'ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.
வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.  
4. குடிநீர் அளவு
வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.
இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
5. புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
6. சுய மருத்துவம் வேண்டாம்
மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை.
7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய...
சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
ரத்தம் - சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.
இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன்விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.