Sunday, December 2, 2018



"மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன.


ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது.


இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு? ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது"




"படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும்."




"இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும்.
ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும்.
மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும்."




"இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது"




"விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.?"




"இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustainable டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது."




"நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்"




"காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்."




"வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller 1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி."

0 comments:

Post a Comment