Sunday, December 2, 2018



ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.

ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன், "அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்' என்று நினைத்து அங்கே சென்றான்.


வணிகர் பெரும் பணக்காரர். அதனால், அங்கு ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. அங்கு சென்று ஒரு ஓரமாய் உட்கார்ந்த அவன், சற்றுத் தொலைவில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தனைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.

இந்த எத்தனும் கூட நம்மைப் போலவே இந்த வீட்டில் திருட வந்துள்ளான் என்பதைப் புரிந்துகொண்ட கொமுரு, அவன் எப்படி இங்கிருப்பவர்களை ஏமாற்றித் திருடப் போகிறான் என்று தான் பார்ப்போமே என்று, கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

வீட்டின் உள்ளே உள்ள ஒரு இருட்டறையில், ஒரு பெரிய கட்டிலின் மீது, வணிகரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அந்த அறைக்குள், மினுக் மினுக்கென்று ஒரு விளக்கு மட்டும் வெளிச்சம் காட்டிக்கொண்டு இருந்தது. வணிகர் கிடத்தப்பட்டிருந்த கட்டிலுக்குக் கீழே ஒரு பெரிய மரப்பெட்டி கேட்பாரற்றுக் கிடந்தது.

கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தன் இப்போது, மெல்ல அந்தக் கட்டிலின் ஓரமாகச் சென்று, தான் கொண்டு வந்த மாலையை, வணிகர் மீது போட்டான்.

பிறகு, தன்னை யாராவது பார்க்கின்றனரா என்று சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், கட்டிலுக்குக் கீழே உள்ள மரப்பெட்டிக்குள் பொசுக்கென்று புகுந்து கொண்டு விட்டான்.

எத்தனின் இந்தச் செய்கைகளை எல்லாம், சற்று தொலைவில் இருந்தவாறு வைத்த கண் வாங்காமல் கொமுரு பார்த்துக் கொண்டிருந்தான். இறந்து போய்க் கட்டிலில் கிடந்த வணிகர், இப்போது திடீரெனப் பேசத் தொடங்கினார். அங்கிருந்த எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம்.

வணிகரா பேசுகிறார்! வணிகரைப் போல் குரலை மாற்றி, அந்தக் கட்டிலின் கீழே கிடந்த மரப்பெட்டிக்குள் புகுந்திருந்த எத்தனல்லவா இப்படிப் பேசுகிறான். வணிகர் பேசத் தொடங்கியதும், அந்த வீட்டின் அழுகுரல்கள் அனைத்தும் இப்போது ஓய்ந்து போயின.

ஆம்... போன உயிரல்லவா மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. வணிகர், அவர் மனைவியை மட்டும் அருகே வரும்படி கூப்பிட்டார். அவளும், கட்டிலின் ஓரமாய் வந்து நின்றாள்.

""நான் இறந்து போய்விட்டதென்னவோ உண்மை தான். ஆனால், சிறிது நேரம் மட்டும் எமதூதர்கள், என் உயிரைச் சற்று விட்டுப் பிடித்து இருக்கின்றனர். நான், போன மாதம் பக்கத்து ஊரு பங்காரு நாயுடுவிடம், ஐநூறு வெள்ளிப் பணத்தைக் கடனாக வாங்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்!'' என்றார்.

இப்படி வணிகர் கூறியதும், ""ஆமாம்! சாகும்போது கடனோடு சாகக்கூடாது,'' என்றனர் அந்தக் கட்டிலைச் சுற்றி நின்ற கூட்டத்தினர்.

"அது சரி வணிகரே... நீங்க சொன்ன அந்தப் பங்காரு நாயுடுவை, நாங்கள் எப்படி அடையாளம் கண்டு கொள்வது?'' என்று, அங்கிருந்தவர்களில், விஷயம் தெரிந்து ஒருவர் தான் இப்படிக் கேட்டார்.

""இப்போது நண்பகல் ஆகிறதல்லவா... இன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் இங்கே, வெள்ளை வேட்டி, சிவப்புச் சட்டை, நீலத்துண்டு அணிந்து, கையில் வெற்றிலை டப்பாவுடன் ஒருவர் வருவார். நெற்றியில் பெரிய நாமம் கூடப் போட்டிருப்பார். அவர் தான் பங்காரு நாயுடு!'' என்று முடித்தார், கட்டிலில் பிணமாய்க் கிடந்த வணிகர்.

""சரிங்க... அவரிடமே கொடுத்துடறேன்,'' என்று தலையாட்டினாள் வணிகரின் மனைவி.
அதற்குப் பிறகு வணிகருக்குப் பேச்சுமில்லை; மூச்சுமில்லை.

கட்டிலுக்குக் கீழே உள்ள அந்த மரப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு எத்தன் நடத்தும் இந்த நாடகத்தை, சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கொமுரு, அந்தத் திருக்கடையூர் எத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மிகவும் வியந்து போனான்.

கட்டிலுக்குக் கீழே இருக்கும் இந்த எத்தன், இனி யாரும் அறியாதபடி முதலில் வெளியே வந்தாக வேண்டும். பின்னரே, பங்காரு நாயுடு போல வேஷம் போட்டு ஏமாற்ற முடியும். ஏன், நாமே இந்த வேஷத்தைப் போட்டு, இங்கிருப்பவர்களை ஏமாற்றி, இந்த ஐநூறு வெள்ளிப் பணத்தையும் அப்படியே அடித்துக்கொண்டு போகக்கூடாது. இப்படி யோசிக்கலானான் கொமுரு. அவ்வளவுதான்... உடனே புறப்பட்டான் அந்த எண்ணத்தைச் செயலாக்க.

ஒரு துணிக்கடைக்குச் சென்று, வெள்ளைவேட்டி, சிவப்புச்சட்டை, நீலத்துண்டு போன்றவற்றை வாங்கி அணிந்து கொண்டான். நெற்றியில் பெரிய நாமமும், கையில் வெற்றிலை டப்பாவுடனும், வணிகர் வீடு போய்ச் சேர்ந்தான்.
பங்காரு நாயுடுவைப் பார்த்ததுமே, மறுபேச்சின்றி, ஐநூறு வெள்ளிப் பணத்தை அப்படியே மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள் வணிகரின் மனைவி.

அதை வாங்கிக்கொண்ட கொமுரு, அங்கிருந்து உடனே புறப்படத் தொடங்கினான் வேக வேகமாக. அவன் புறப்படத் தொடங்கிய அந்தச் சமயத்தில் தான், கட்டிலுக்குக் கீழே ஒளிந்திருந்த எத்தன், மெல்ல வெளியே வந்தான். அப்படி வெளியே வந்தவன், தான் தெரிவித்த அதே பங்காரு நாயுடு மாதிரியான தோற்றத்தோடு கூடிய ஒருவன் இப்போது மெல்ல நழுவிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.

நம்முடைய திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு விட்ட எவனோ ஒருவன் தான், இப்படி இங்கிருப்பவர்களையெல்லாம் ஏமாற்றிப் பண மூட்டையோடு நழுவிக்கொண்டிருக்கிறான் எனச் சட்டென உணர்ந்தான் எத்தன். அவ்வளவுதான், பண மூட்டையோடு நழுவும் அவனை விரட்டிப் பிடிப்பதென முடிவு செய்தான்.
அடுத்த நொடியே, முடிவு செயலானது.

""ஏய், ஏய்...'' என்று கத்திக்கொண்டு எத்தன், கொமுருவின் பின்னால் ஓடத் தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்ட பிறகு தான், சட்டென்று திரும்பிப் பார்த்தான், பண மூட்டையோடு நழுவிக் கொண்டிருந்தான் எத்தன்.

அவ்வளவுதான்! அப்படியே அதிர்ச்சி அடைந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தலைதெறிக்க ஓடத் தொடங்கினான் கொமுரு. இப்போது, எத்தன் விடுவதாகவும் தெரியவில்லை, எத்தன் நிற்பதாகவும் தெரியவில்லை. இருவரும் ஓடிக்கொண்டே இருந்தனர்.
இப்படி இருவரும் ஓடிக்கொண்டே இருக்கும்போது, ஊருக்கு வெளியே சற்று தூரத்தில், வைக்கோல் போர்கள் இருந்தன. "இந்த வைக்கோல் போருக்குள் நுழைந்துகொண்டு விட்டால், யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்று நினைத்த கொமுரு, மறுகணமே, வைக்கோல் போருக்குள் புகுந்து மறைந்துவிட்டான்.

கொமுரு விரட்டியபடி, அந்தக் களத்துமேட்டிற்கு வந்து சேர்ந்த எத்தன், பணமூட்டையை எடுத்து கொண்டு ஓடி வந்தவன், திடீரெனக் காணாமல் போனது பற்றிக் கவலைப்படலானான். எப்படியும், இந்த வைக்கோல் போர்களில் தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும் என்று, கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்த எத்தன், அவனை எப்படிக் கண்டுபிடிப்பதென்று யோசிக்கலானான்.

எத்தன் இப்படி யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக, ஆட்டுக் கிடாய்களை ஓட்டிக்கொண்டு ஓர் இடையன் வந்தான்.

அவனிடம், ""ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கையில், ஐந்து மணிகளை மட்டும் இரவல் தர முடியுமா?'' என்று கேட்டான் எத்தன்.

இடையன் கொடுத்த சலங்கை மணிகளைக் கயிற்றில் கோத்து, தன் கழுத்தில் கட்டிக் கொண்டான் எத்தன். பின், அந்த களத்துமேட்டிலிருந்த ஒவ்வொரு வைக்கோல் போரின் மேலும், மாடு உராய்வது போல உராயத் தொடங்கினான்.

அப்படி அவன் உராயத் தொடங்கியபோது, சலங்கை மணிகள் அவ்வப்போது ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

இப்படி ஒவ்வொரு போராகச் சென்று எத்தன் உராய்ந்து கொண்டு வரும் போது, கொமுரு ஒளிந்திருந்த அந்த வைக்கோல் போரும் வந்தது. தான் ஒளிந்திருக்கும் அந்த வைக்கோல் போரில் வந்து உராய்வது ஒரு மாடு தான் என்று நினைத்த கொமுரு, ""சே, சே... இந்த சனியன்பிடித்த மாடு, ஏன் தான் இப்படி வந்து உராய்கிறதோ தெரியவில்லையே!'' என்று கூறினான் போருக்குள் இருந்தபடியே.

அவ்வளவுதான்... பண மூட்டையோடு வந்தவன், இந்த போருக்குள் தான் இருக்கிறான் என்று புரிந்துகொண்ட எத்தன், ""எழுந்து வாடா வெளியே!'' என்று அதட்டினான்.

ஒளிந்திருந்த இடம் தெரிந்துவிட்டதால், வேறு வழியின்றி வெளியே வந்தான் கொமுரு. ""அடடே... நீ தானா!'' என்று வியந்தான் கொமுருவைப் பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்த எத்தன்.

""ஆமாம்... நானேதான்!'' என்றான், அசட்டுத் சிரிப்புடன் கொமுரு.

பிறகென்ன, வணிகரின் ஐநூறு பணமும், ஆளுக்குப் பாதியானது.

0 comments:

Post a Comment