நவம்பர் 14
தேசிய குழந்தைகள் தினம்
திருக்குறள்
அதிகாரம்:இனியவை கூறல்
திருக்குறள்:97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
விளக்கம்:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
பழமொழி
Slow and steady wins the race
நிதானமே வெற்றி தரும்
இரண்டொழுக்க பண்பாடு
* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.
* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்
பொன்மொழி
நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.
சாக்ரடீஸ்
பொது அறிவு
1.இங்கிலாந்து நாட்டின் நாணயம் எது?
பவுண்ட்
2. வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படுவது எது?
தாய்லாந்து
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
தக்காளி
1.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.
சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
தொண்டைப் புண்ணை ஆற்றும்.
2. இரத்தத்தை சுத்தமாக்கும்.
எலும்பை பலமாக்கும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
தோலை பளபளப்பாக்கும்
இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
3.பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.
மலச்சிக்கலை நீக்கும்.
குடற்புண்களை ஆற்றும்.
களைப்பைப் போக்கும்.
English words and meaning
Crisis. நெருக்கடி
Combat. போராடு
Clash. மோதல்
Censure. கண்டனம்
Contract. ஒப்பந்தம்
அறிவியல் விந்தைகள்
அணில்
* நாங்கள் அனைவராலும் விரும்பப் படும் ரசிக்கப்படும் ஒரு சிறிய கொறித்துண்ணும் பிராணி
* நாங்கள் வேகமாக மரத்தில் ஏற எங்கள் கால் மற்றும் உடல் அமைப்பு உதவுகிறது. எங்களின் விருப்ப உணவு கொட்டைகள்.
* கடின கொட்டைகள் எங்கள் பல்லை கூர்மையாக்குவதுடன் பல் அதிகம் வளராமல் தடுக்கிறது
* காடுகள் உருவாக உங்களை விட நாங்களே அதிகம் உதவுகிறோம். எங்களுக்கு பிரியமான கொட்டை மற்றும் விதைகளை புதைத்து மறந்து விடுவோம். அவை மரங்களாக வளர்ந்து விடும்.
நீதிக்கதை
பொறுப்பு
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.
குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.
யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.
ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.
மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஆறுமாதம் சென்றது.
குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.
""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.
""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.
""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.
""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.
ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.
""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லா பம் கிடைக்குமே என்று நினைத்தேன்.
நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.
பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.
அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.
இன்றைய செய்திகள்
14.11.18
* கஜா புயல் காரணமாக சென்னைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
* திருக்கோவிலூர் அருகே பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன்திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
*அதிக எடையைத் தாங்கிச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி. - மாக் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
* லண்டனில் தொடங்கிய 16-ஆவது ஏடிபி டென்னிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்-ஜப்பானின் நிஷிகோரியிடம் தோல்வியடைந்தார்.
* ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 14 இடங்கள் முன்னேறியுள்ளார்.
0 comments:
Post a Comment