Friday, November 30, 2018


மனைவி மற்றும் மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் வாலிபர் ஒருவர் தன் உயிரையே தியாகம் செய்துள்ளார். விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்தது யார்? என தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக கோவப்படுவீர்கள்.
உலகில் மிக அதிகமாக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டிற்கு மட்டும் சராசரியாக 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே, பெரும்பாலான விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு இந்திய சட்ட திட்டங்கள் கடுமையான தண்டனையை வழங்குவது இல்லை.
பெரிதாக என்ன தண்டனை கொடுத்து விடப்போகிறார்கள்? வெறும் அபராதம்தானே... அதை எளிதாக கட்டி விடலாம் என்ற அசட்டு தைரியத்தில், பலர் தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனங்களை இயக்கி, விபத்துக்களை ஏற்படுத்தி கொண்டேதான் உள்ளனர்.
அத்தகைய தவறுகளை இழைக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டிய அரசு, வெறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களின் அலட்சியம் தொடர் கதையாக நீண்டு கொண்டே உள்ளது.
இப்படியான ஒரு நபரின் அலட்சியம், ஒரு குடும்ப தலைவனின் உயிரை பரிதாபமாக காவு வாங்கி விட்டது. குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்த நபரிடம் இருந்து பாசத்திற்குரிய தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்றுவதற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார் அந்த குடும்ப தலைவர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் உபயத்துல்லா (35). உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, தனது மனைவி, மகளுடன் அவர் சென்னை வந்திருந்தார். ஆனால் மனைவி, மகளை விட்டு விட்டு தானும் விண்ணுலகம் செல்லப்போகும் விபரீதத்தை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை.
இதில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயமும் உள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில்தான் உபயத்துல்லாவின் உறவினர் உயிரிழந்திருந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காகவே உபயத்துல்லா குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார்
சம்பவத்தன்று உபயத்துல்லா மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர், சென்னை திருமங்கலம் ஜங்ஷன் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த விபரீத சம்பவம் அரங்கேறியது.
உபயத்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை நோக்கி மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதனை உபயத்துல்லா கவனித்து விட்டார். ஆனால் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அதனை கவனிக்கவில்லை
கண்ணிமைக்கும் நேரம் கூட இல்லை. மனைவி, மகளை காப்பாற்றியாக வேண்டும். சட்டென அவர்களை ஓரமாக தள்ளி விட்டார் உபயத்துல்லா. அதிவேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார், உபயத்துல்லா மீது மட்டும் ஏறியது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உபயத்துல்லா நினைத்திருந்தால் அங்கிருந்து நகர்ந்திருக்க முடியும். ஆனால் மனைவி மற்றும் மகளை காப்பாற்றியாக வேண்டுமே. எனவே கண்ணிமைக்க கூட நேரம் இல்லாத அந்த சமயத்தில், மனைவி, மகளுக்காக தனது உயிரையே தியாகம் செய்து விட்டார் உபயத்துல்லா.
குடிபோதையில் காரை ஓட்டி வந்த யாரோ ஒருவரின் அலட்சியத்தால், உபயத்துல்லாவை இழந்து தவிக்கிறது அவரது குடும்பம். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment