Tuesday, November 20, 2018





மெல்பன் ஸ்வான்ஸ்டன் தெருவிலுள்ள இந்தியவிசா அலுவலகத்தில் சுற்றுலாவுக்கான
விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு ஃப்ளிண்டர்ஸ் தெரு இரயில் நிலையத்துக்கு வந்தான்
சண்முகசுந்தரம். பாக்கினாம் செல்லும் இரயில் ஆறாம் எண் தடத்தில் புறப்படத் தயாராய்
நின்று கொண்டிருந்தது. டாட்ஸ்லாட்டொவில் பதினொரு டாலர் அருபத்தியைந்து சென்ட்ஸ்
பரிசு விழுந்ததுபோல் ஒரு சந்தோஷம். இரயிலில் ஏறி வசதியான ஓர் இடத்தில் அமர்ந்து
கைபேசியுடன் உறவை ஏற்படுத்தினேன். இரயில் புறப்பட இருந்த சமயத்தில் ஓடிவந்த
ஒருவர் கதவைத்திறந்து உள்ளேவந்தவர் அவன் எதிரே வந்து அமர்ந்தார். அவர் முகத்தில்
ஐம்பது டாலர் பரிசுவிழுந்த மகிழ்ச்சியைக் காணமுடிந்தது.
இரயில் புறப்பட்டு ரிச்மண்ட் இரயில் நிலையத்தைக் கடந்ததும் கைபேசியிலிருந்து
தற்செயலாக நிமிர்ந்தவன் எதிரே அமர்ந்திருந்தவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை
அறிந்தான். அவரைப்பார்த்து இலேசாய் புன்னகைக்கவும் அவரும் அவனைப்பார்த்து,
“தமிழா?” என்றார்.
ஆம் என்பதுபோல் அவனும் தலையசைத்தேன்.
“யாழ்ப்பாணமா?”
அவன் மீண்டுமொருமுறை புன்னகைத்தன்.
“எந்த இடம்?”
“திருநெல்வேலி”
“ஓ! நெருங்கிட்டீங்க”
“நெருங்கித்தான் விட்டேன். இடையில்தான் கொஞ்ச இடைவெளி”
“என்ன தம்பி, பகடி பன்றியள்”
“பகடி ஒன்றுமில்லை ஐயா, உண்மைதான். என் ஊர் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி. இடையில்
கடல் இருக்கிறதல்லவா? அதைத்தான் கொஞ்ச இடைவெளி என்றேன்”
“தமிழ் நாடா?” என்றார்.
அவர் குரலில் முன்பிருந்த ஆர்வம் சற்று குறைவதை உணர்ந்தான். நாம் ஒன்றை எதிர்பார்க்க அது
வேறு  விதமாக இருந்தால் ஆர்வம் குறைவது இயல்புதானே. ஆனால் அவர் பேசுவதை நிறுத்தவில்லை.
தொடர்ந்து பேசினார். இலங்கையிலிருந்து வந்தது, ஆரம்பத்தில் பட்ட துன்பங்கள். இங்குள்ள தமிழரின்
நடவடிக்கைகள் போன்று பலவற்றைப்பற்றி பேசியவர் மறக்காமல் கோவிலைப்பற்றியும் பேசினார்.
ஊரில் நடப்பதுபோலவே சூரன்போர் ஆலயங்களில் இங்கு நடத்தப்படுவதையும் அன்று கோவிலில்
சூரன்போர் இருப்பதையும் மாலையில் கோவிலுக்குப்போய் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்றும்
சொன்னார். அப்படிச்சொன்னவர் தம்பி எப்படி இன்று சூரன்போருக்கு கோவிலுக்கு வருவீர்களா என்று
அவனிடம் கேட்டார். அதற்கு அவன் அவரிடம் அதைப்பற்றி இன்னும் ஒன்றும் முடிவெடுக்கவில்லை என்று
சொன்னதும் அவர் அவனை ஏதோ ஒரு  வினோதமான பிராணியைப் பார்ப்பவர்போல் பார்த்தவர் என்ன தம்பி
கதைக்கிறீங்க நீங்கள் இந்துதானே என்று கேட்டார். ஆம் இந்துதான். ஆனால் கடவுளே கதி என்று
இருப்பவன் அல்ல. அதிகமாக கோவிலுக்கு போவதில்லை. கோவிலுக்கு போனால்தான் இந்து என்ற
எண்ணமும் என்னிடமில்லை என்றான். சுருக்கமாக சொன்னால் கடவுள் நம்பிக்கை என்று ஒன்றும்
கிடையாது. ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறேன். அச்சக்தியை
மதிக்கிறேன் என்றான்.
“ஓஹோ! அப்படியானால் நீங்கள் நாத்திகரா? பெரியார் கட்சியா?” என்றார்.
“நான் நாத்திகிகனும் இல்லை. பெரியார் கட்சியுமில்லை” என்றான்.
என்னவோ கதைக்கிறியள் தம்பி. ஒன்றும் புரியமாட்டேங்கிறது என்று சொன்னவர் தான் இறங்க வேண்டிய
கிளேடன் வந்து விட்டது சந்திப்பம் என்று சொல்லி கைகொடுத்தவரிடம் அவனும் சந்திப்பம் என்று
கைகொடுக்க அவர் விடைபெற்று சென்றார்.
சிலமாதங்கள் சென்றிருக்கும். இந்தியாவுக்கு விடுமுறைக்கு சென்று திரும்பிருந்தான் சண்முகசுந்தரம். ஒரு
நாள் அவன் மனைவி கோவிலில் இன்று திருக்கல்யாணம் அழைத்து செல்லுங்கள் என்றாள். அவள்
விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவன் இரயில் பயணத்தில்
சந்தித்தவரை எதிர்பாரா விதமாக சற்று தூரத்தில் கண்டான். அவரும் அவனைப்பார்த்து கையசைத்தவர்
அவனை அவர் அருகில் வரும்படி சைகையால் அழைக்கவும் மனைவியிடம் கோவிலுக்குள் செல்லுமாறு
கூறிவிட்டு அவரை நோக்கி நடந்தான். அவரோ அருகில் நின்றிருந்த வேறு சிலரிடம் அவனை நோக்கி
கைகாட்டியவண்ணம் ஏதோ பேச அவர்கள் அவனைப்பார்த்து சிரிக்கத்தொடங்கியதை வைத்து தன்னைப்
பற்றித்தான் ஏதோ பகடி பேச அதற்கு சிரிக்கிறார்கள் என்பதை ஒருவாறு உணர்ந்தான். அவர்கள் அருகே
சென்றதும் என்ன காற்று இந்த பக்கம் வீசுகிறது என்றார். அவனும் ஒன்றும் தெரியாததுபோல் என்ன ஐயா
சொல்றீங்க என்றான். அவரும் விடவில்லை. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பார்களே
அது உங்களைப் பொருத்தவரை சரிதான் என்றார். அவர் அப்படிச் சொல்லவும் அருகில் இருந்தவர்கள் அவனைப்
பார்த்து சிரிக்க அது அவனுக்கு தர்மசங்கடமாகவே அவன் அவரிடம் சுற்றிவளைக்காமல் சொல்வதை
நேரிடையாகச் சொல்லுமாறு பணிவாகக் கேட்டான். அதற்கு அவர் அவன் கடவுள் நம்பிக்கை கிடையாது
என்று சொன்னதையும் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என்றதையும் சொல்லி இப்போது கோவிலுக்கு
வந்திருக்கிறீர்களே என்றுசொல்லி நகைத்தார். அப்போது அவனுக்கு அவர் தன்னை சீண்டுகிறார் என்பது
நன்றாக புரியவந்தது. உடனே அவன் அவரிடம்,
“ஐயா, உங்கள் வீட்டில் பெரியவர்களுடைய படம் இருக்கிறதா?” என்றான்.
“ஏன் தம்பி? எதுக்கு கேக்குறீங்க?”
“சும்மாதான். சொல்லுங்க”
“இருக்கு தம்பி. அப்பா படம், அப்பப்பா படம் எல்லாம் இருக்கு”
“படத்தை எல்லாம் போட்டோ ஆல்பத்துல வெச்சுருக்கீங்களா?”
“என்ன தம்பி வெளங்காத புள்ளயா இருக்கீங்க. அவங்க படத்த ஆல்பத்துலயா வெப்பாங்க. சட்டம்போட்டு
சுவத்துல மாட்டியிருக்கோம். மாலையெல்லாம் போட்டு  வணங்கிவருகிறோம்.”
“அப்படியா, ரெம்ப நல்லது. அவங்களுக்கு என்ன வயசு இருக்கும்?
“அதுவா. எனக்கே வயது அறுபது ஆகிறது. எங்க அப்பாவுக்கு என்பத்தைந்து தொன்னூறு வயதுக்குள் இருக்கும்.
அப்பப்பாவுக்கு நூற்றுக்குமேல் இருக்கும்” என்றார்.
அவர் அவ்வாறு விளக்கம் சொன்னதும் ஐயா நீங்கள் என்பதில் இருந்து நூற்றுக்கு மேல் வயதுடைய அப்பாவுக்கும்
அப்பாப்பவுக்கும் கொடுக்கும் மரியாதை உறவு என்பதையும் தாண்டி நம்மிடையே வாழ்ந்து மறைந்த பெரியவர்கள்
என்பதால்தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்றான். அதற்கு அவரும் ஆமாம் என்பதுபோல் தலையை
ஆட்டினார். அடுத்தபடியாக தமிழர் அனைவருக்கும் பெரியவர்களை மதிக்கும் பண்பு உள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களா
என்று அவன் கேட்டதற்கும் தலையசைத்து சரிதான் என்றார். அவர் அவன் சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டதும்
ஐயா இப்போது நான்சொல்வதை கவனமாய்க் கேளுங்கள் உங்களுக்கு உங்கள் கேள்விக்கு உண்டான பதிலும்
கிடைக்கும் அத்தோடு உண்மையும் புரியவரும் என்றான். நூறு வயதுக்குள்ளும் நூறு வயதுக்கு மேலும் வயதுடைய
பெரியவர்களையே நாம் மதித்து வணங்குகிறோம். இப்போது இங்கே நீங்கள் கடவுள் என்று கோவிலுள் வைத்து
வணங்குபவர்களும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைந்தவர்கள்
என்றுதானே உங்கள் புராணங்களும் இதிகாசங்களும் சொல்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களையே
பெரியவர்கள் என்று மாலைபோட்டு வணங்கும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்து
மறைந்தவர்களை அதே மாதிரி பெரியவர்கள் என்று எண்ணி ஒரு “ஹலோ” சொல்வதில் தவறு என்ன இருக்கிறது?
பெரியோரை மதிப்பதுதானே தமிழர் பண்பாடு. அந்தவகையில்தான் கோவிலுக்கு வந்திருக்கிறேன் அவரை கடவுள்
என்றோ என்னைக்காப்பாற்றுவார் என்றோ சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார் என்றோ நிச்சயம் நான் இங்கு
வரவில்லை என்று அவன் சொன்னதும் அவர் முகமும் அவர் அருகில் நின்று அவனைப்பார்த்து சிரித்தவர்கள்
முகங்களும் மாறத் தொடங்கியதோடு எதையோ யோசிக்கவும் தொடங்கின.
அவன் சொல்வதை சரியென்பதுபோல் கோவில்மணியும் “டங்க்… டங்க்…” என்று ஒலிக்கத்தொடங்கவும் அவனும்
அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

0 comments:

Post a Comment