Friday, March 15, 2019


உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நுகர்வு கலாச்சாரம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மனிதரும் நுகர்வோரே. அதிலும் டிஜிட்டல் வாழ்க்கை என்ற பெயரில் செல்போனில் ஆர்டர் செய்து வாழ்க்கையை நடத்தும் தற்போதைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார்கள். அது, நம்முடைய அறியாமையால் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும்… மறுபுறம் போனுக்கு ரீ சார்ஜ் போடும் போது தொடங்கி பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்கும்போதும், திரையரங்குகள் மற்றும் பல இடங்களில் பாதிக்கப்படும்போது எனப் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தும் ஏமாறுகிறோம்.
அவர்கள் அனைவரும் தமது உரிமையைக் காத்திடவும், ஏமாற்றத்தைத் தவிர்த்திடவும் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காகத்தான் ஆண்டுதோறும் மார்ச் 15-ம் நாள் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் புரட்சிகரமான அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதாவது, 1983-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் உலகம் முழுவதும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
20ஆம் நூற்றாண்டிலிருந்துதான் நுகர்வோரின் முக்கியத்துவம் கவனிக்கப் பட்டு வருகிறது. உலக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கணிப்பின்படி 21 ஆம் நூற்றாண்டில் நுகர்வோர் விழிப்புணர்வு இன்னும் அதிக தேவையாயிருக்கிறது.  வெளியில் செல்லாமலே ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றிவிட முடிகிறது.
நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் அதன் உரிய பலனைத் தருகின்றதா? நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா? நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. இந்த கதையே நம்மில் பலருக்கு இன்னும் தெரியாமல்தான் இருக்கிறது.
தரம் குறைந்த பொருட்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். அதற்காக அந்த பொருளை நம்மிடம் விற்பனை செய்தவர் மீது நாம் வழக்கு தொடர முடியும். அது போலவே பேங்குகளிலோ ஆஸ்பத்திரிகளிலோ, பஸ், ரெயில், டாக்ஸி, ஆட்டோ, அல்லது விமானம் போன்றவற்றிலோ நாம் பெறும் சேவைகளில் குறைபாடுகளோ குளறுபடிகளோ இருந்தால் அவையும் நம் உரிமையைப் பாதிக்கும் செயல்கள்தான் அதற்காகவும் நாம் வழக்கு தொடர முடியும்.
சில பொருட்கள் நம் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்குமானால் அந்தச் பொருட்களின் தயாரிப்பாளர் விற்பனையாளர்கள் மீது நுகர்வோர் உரிமை மீறல் அடிப்படையில் குற்றம் சாட்டலாம். வழக்கு தொடரலாம். தண்டனையும் வாங்கித்தரலாம்…முடியும்.
யாரோ ஒருவரால் நாம் பாதிக்கப்படுவதை, எங்கோ ஒருவர் செய்கிற தவறால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதை இப்போது நம்மால் தடுக்க முடியுமென்றால் அதற்கும் ஒரு மனிதன் காரணமாயிருந்தான் என்பது எத்தனை சிறப்பானது. ஆம், அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி தான் அந்த மனிதன்.
1962 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசும்போதுதான் முதன்முறையாக நுகர்வோர் ப்ற்றிய சில கருத்துக்களை மக்களிடமும் அதிகாரிகளிடமும் அவர் முன்வைத்தார்.
1985 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் நவீனகால இயக்கத்துக்கு ஏற்ப 1999 ஆம் ஆண்டு, மேம்படுத்தப் பட்ட புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றின்படி நுகர்வோருக்கு,
* பாதுகாப்பு உரிமை
* தகவல் பெறுவது
* தேர்ந்தெடுக்கும் உரிமை
* உத்தரவாதம் பெறும் உரிமை
* நிவர்த்தி பெறும் உரிமை
* உரிமைகளை தெரிந்து கொள்ளும் உரிமை
(மேலும் விவரங்களுக்கு www.consumeraffairs.nic.in என்ற மத்திய நுகர்வோர் நலன் அமைச்சக இணையதளத்தை பார்க்கவும்)
உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவிலும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருகின்றன. இந்த சட்டம் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்1986 என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும்.  நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2003 ஆண்டு புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டது.
நாம் கடைகளுக்கு செல்கிறோம். உணவு பொருள்கள் வாங்குகிறோம். உடைகள் வாங்குகிறோம். மரப்பொருட்கள் வாங்கிறோம். மாமிசம் வாங்குகிறோம். வாகனம் வாங்குகிறோம். வீட்டுக்கு தேவையான வண்ண பூச்சுகள் வாங்குகிறோம், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்குகிறோம், வெளிநாட்டு குளிர்பானங்களின் மோகத்தில் திளைக்கிறோம், மது அருந்துகிறோம். சுற்றுலா செல்கிறோம். விடுதி அறைகளில் அறை எடுத்து தங்குகிறோம். விமானத்தில், ரயிலில், பேருந்தில் பயணிக்கிறோம். இப்படி எல்லாவிதமான நுகர்வுகளையும் நாம் மேற்கொள்கிறோம். ஆனால் அதற்குரிய ரசீதை மட்டும் சரியான முறையில் கவனித்து வாங்க மறந்துவிடுகிறோம்.
இதையெல்லாவற்றையும் மறந்துவிட்டு இணையத்திலேயே வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கிறோம்.
1 ரூபாய்க்கு கடையில் மிட்டாய் வாங்குவதும், 1 கோடி ரூபாயில் வீடு கட்டுவதும் நுகர்வால்தான் நடக்கின்றன. சிமெண்டும், ஜல்லியும், செங்கற்களும், சரியான விலைக்கு யாராவது வாங்கியிருக்கிறோமா?
இன்று சுத்தமான காற்றும் நீரும் நாம் கடையில் கேட்டு வாங்கி கொண்டிருக்கிறோம், அதில் எந்தளவு உண்மையிருக்கிறது என்பதை நாம் பரிசோதனை செய்திருக்கிறோமா? சாதாரணமாக அன்றாட தேவைகளுக்கே யாரோ ஒருவரை நம்பியிருக்கிற நாம் அதற்கான முக்கியத்துவம் குறித்து யோசிக்கக் கூட நேரமில்லை என்பது பெருமையான வார்த்தை இல்லை என்பதை உணர்த்தும் நாளின்று.

0 comments:

Post a Comment