திருக்குறள்:160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

உரை:

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.


பழமொழி :
A thief knows a theif

பாம்பின் கால் பாம்பறியும்

பொன்மொழி:

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.

- கீர்கே கார்ட்




இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
1.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா

2.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்

நீதிக்கதை :

உதவி:-


கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.



கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.



படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1) ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

2) 12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் ? - பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டி புதிய பாடத்திட்டத்தில் வெளியீடு.



3) தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்விகளுக்கு டெஸ்ட் - கமிஷன் உத்தரவு

4) சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2019 : ஏப். 5 வரை விண்ணப்பிக்கலாம்

5) டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது