தமிழக அரசு, விரைவில் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலைத் தொடங்கவுள்ளது. இந்த சேனல், 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும். இதில், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, ஜனவரி 21-ம் தேதி, `கல்வி தொலைக்காட்சி' என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளது. இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். நீட் தேர்வுக்கான பயிற்சியையும் இந்த சேனல் வழியாகவே வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது பள்ளிக்கல்வித் துறை. இதற்கான பணியை 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
வணிக நோக்கில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் போட்டி போடும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எல்.கே.ஜி மாணவர்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை பயன்படும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகள் என 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் இடம்பெறும். இதில், நீட் போன்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சியையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் திட்டத்தையும் வைத்துள்ளனர்.
மாணவர்கள் பள்ளியில் உள்ள நேரங்களில், பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகள், திறன் வளர்ப்பு குறித்த பயிற்சிகள், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த சேனல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நெட்வோர்கில் 200-வது சேனலாக செயல்படும். கல்வி தொலைக்காட்சி சேனலுக்கான அலுவலகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் செயல்பட உள்ளது. இந்தச் சேனலுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரிக்க, அதிநவீன கேமராக்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கருவிகளை வாங்க தமிழக அரசு 1.3 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
0 comments:
Post a Comment