Tuesday, March 19, 2019



                          புதுக்கோட்டை,ஜன,22-                              தமிழக பள்ளிக்கல்வித்துறைமற்றும்கல்வித்தொலைக்காட்சிசார்பில் மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் மற்றும் நீட் தேர்விற்கான உத்திகள் குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது..


நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா  பேசியதாவது:தமிழக பள்ளிக் கல்வித்துறை யின்  சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய கல்வித் தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது. கல்வித் தொலைக்காட்சியானது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டலுடன் மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறைமுதன்மைச் செயலர் அவர்களின் தலைமையில் ஆரம்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கல்வித் தொலைக்காட்சி அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் செயல்படத் தொடங்கி செயல்பட உள்ளது.24 மணி நேரமும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.
முதல் கட்டமாக 17 வகையான எட்டுமணி நேர நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன.மாணவர்கள் பகல் நேரங்களில் பள்ளியில் இருப்பதால் முக்கியமான பாடங்கள் பற்றிய நிகழ்ச்சிகள் மாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகும்.மாவட்ட அளவில் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது முழுக்க,முழுக்க சிறந்த பாட  ஆசிரியர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் தயார் செய்து ஒளிபரப்பாக இருக்கின்றன.

தினமும் ஒரு திருக்குறள் பற்றி விளக்கவுரைவுடன் வழங்கப்படும் குறளின் குரல்,மாணவர்களின் உடல் நலப் பாதுகாப்புக்கான நலமே வளம்,முக்கிய தேசிய சர்வதேச தினங்களைப் பற்றிய செய்திகளை விளக்கும் நாட்குறிப்பு,நல்லாசிரியர்கள்,கல்வியாளர்கள் ,கல்வி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கும் குருவே துணை,சாதனைகள் படைக்கும் கிராமப்புற மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும் சுட்டி கெட்டி,பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்கள்,கல்விச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தும் வல்லரசு அரசு,நல்லொழுக்க கதைகளின் வழியாக ஒழுக்க நெறிகளைக் கற்பிக்கும் ஒழுக்கம் விருப்பம் தரும்,தினமும் ஒரு சிறந்த பள்ளியை பற்றிய மணியோசை , தேசிய மாணவர் படை ( என்.சி.சி) நாட்டுநலப்பணித்திட்டம்(என்.எஸ்.எஸ் )மற்றும் சமூகப் பணிகள் பற்றிய உயிர்த்துளி நீர், நீட் தேர்வு தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சியான ஏணிப்படிகள், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பாடவாரியாக  எளிதாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் ,காட்சி வடிவிலான நிகழ்ச்சிகள் ,அனிமேஷன்கள், கல்வி சார்ந்த அறிவிப்புகள் ,உதவித்தொகை ,பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை  கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.தமிழக அரசு கேபிள் நிறுவனம் வழியாக 200 ஆவது சேனலாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பப் படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு களமாகவும்,பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுத் தளமாகவும்வகல்வித் தொலைக்காட்சி செயல்படும்.குறிப்பாக கல்வித்தொலைக்காட்சியானது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.எனவே மாணவர்களாகிய நீங்கள்  இது போன்ற நீட் வெற்றிக்கான  வழிகாட்டல் நிகழ்ச்சிகளை சரியான முறையில் பயன்படுத்தி நீங்களெல்லாம் சிறந்த சாதனையாளர்களாக உருவாக வேண்டும்.நிலவையே வசப்படுத்திய நமக்கு நீட்- டும் வசமாகும் என்றார்..

0 comments:

Post a Comment