பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு
சென்னை, மார்ச் 1-பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரியில், 7,082 பள்ளிகளில் படிக்கும், 8.61 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இவர்களில், 4.60 லட்சம் பேர் மாணவியர். தனித் தேர்வர்களாக, இரண்டு திருநங்கையர், 8,855 பெண்கள் உட்பட, 25 ஆயிரத்து, 741 பேர், தேர்வு எழுதுகின்றனர்.இந்தத் தேர்வுக்கு, கடந்த ஆண்டை விட, 150 கூடுதலாக, மொத்தம், 2,944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வேலுார், கடலுார், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சென்னை புழல் சிறைகளைச் சேர்ந்த, 45 கைதிகளும், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கு, புதிய பாடத்திட்டம்அமலாகிறது.எனவே, இன்று துவங்க உள்ள பொதுத் தேர்வு, பள்ளி மாணவர்களுக்கு, 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, பழைய பாடத்திட்டத்தின்படி நடக்கும் கடைசிதேர்வாகும்.இதில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் வரை, பழைய பாடத்திட்டத்தில், மறுதேர்வு நடத்தப்படும்.அதேநேரம், கடந்த கல்வி ஆண்டில், 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கான, புதிய தேர்வு முறை அறிமுகமானது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு நடக்கும் முதல்தேர்வும் இதுவே.தேர்வு முறைகேடுகளை தடுக்க, இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் என, 23 அதிகாரிகள் அடங்கிய, உயர்மட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரம் ஆசிரியர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார், துணை கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகளும், தேர்வு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் 50 ஆயிரம் பேர்சென்னையில் மட்டும், 158 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 408 பள்ளிகளைச் சேர்ந்த, 26 ஆயிரத்து, 285 மாணவியர்; 23 ஆயிரத்து, 134 மாணவர்கள் உட்பட, 49 ஆயிரத்து, 419 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு பணிக்கு, 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட, 3,000 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.200க்கும் மேற்பட்ட, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாவட்டத்திற்கு, இயக்குனர் பழனிசாமி மற்றும் இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி அடங்கிய, உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், வினாத் தாள் மற்றும் விடைத் தாள் காப்பு மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில்,146 தேர்வு மையங்களில், 47 ஆயிரத்து, 073 மாணவ - மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 128 தேர்வு மையங்களில், 20 ஆயிரத்து, 580 மாணவர்கள், 22 ஆயிரத்து, 107 மாணவியர், தனித்தேர்வர்கள் 2,348 என, மொத்தம் 45 ஆயிரத்து, 035 பேர் தேர்வு எழுதுகின்றனர்.கடுமையான கட்டுப்பாடு!தேர்வு மையங்களில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள், மொபைல் போன் உட்பட, எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்லக்கூடாது.மாணவ - மாணவியர், புத்தகங்கள், துண்டு காகிதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வரக்கூடாது. அருகில் உள்ள மாணவர்களை பார்த்து, தேர்வு எழுதக்கூடாது. விடை தாளை மாற்றி, விடைகளை எழுதக்கூடாது.தேர்வறையில், ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது. விடைகளை எழுதி, அவற்றை முழுவதுமாக அடிப்பது கூடாது. சிறப்பு குறியீடு, வண்ண பென்சில், 'ஸ்கெட்ச்' போன்றவை பயன்படுத்தக்கூடாது என, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment