ஏமாறுபவர்கள் இருக்கிறவரை உலகம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கும். இயந்திரமயமான இன்றைய உலகில்... நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். அது, நம்முடைய அறியாமையால் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது, திரையரங்குகள் மற்றும் சில இடங்களில் பாதிக்கப்படும்போது எனப் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தே ஏமாறுகிறோம். இதற்கு, விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லாததே காரணம். இப்படி, இந்த உலகத்தில் ஏமாற்றப்படும் ஒவ்வொரு மனிதரும் நுகர்வோரே. அவர்கள் அனைவரும் தமது உரிமையைக் காத்திடவும், ஏமாற்றத்தைத் தவிர்த்திடவும் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காகத்தான் ஆண்டுதோறும் மார்ச் 15-ம் நாள் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் புரட்சிகரமான அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதாவது, 1983-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் உலகம் முழுவதும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நுகர்வோர் யார்?
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது நுகர்வு. நீரின்றி அமையாது உலகு என்பதுபோல நுகர்வின்றி எந்த மனிதனுடைய வாழ்வும் அமையாது. ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்குத் தேவையானவற்றை விலைகொடுத்து, பெற்று அனுபவிப்பதே 'நுகர்வு' ஆகும். அப்படிப்பட்ட நுகர்வைச் சந்திக்கும் எல்லா மனிதருமே நுகர்வோர் ஆகிறார். நாட்டில் சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதிவரை அனைவருமே நுகர்வோரே. சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துபவர் நுகர்வோர் என வரைமுறை செய்யப்படுகிறார். நுகர்வு செயல்பாடு என்பது அதைச் சார்ந்தவர், விற்பனையாளர் மற்றும் பொருளைச் சார்ந்திருக்கிறது. ரால்ப் நாடர் என்பவரே இந்த இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர்தான் முதன்முதலில் இந்த இயக்கத்துக்கு வித்திட்டவர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி, அமெரிக்க மக்கள் பயன்பெறும் பொருட்டு, 1962-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி இதன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 24-ம் நாள் தேசிய நுகர்வோர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1986-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாள்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தியாவில் இந்தத் தினம் இந்த நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏமாறுவது எப்படி?
இன்றைய உலகில் எங்கும் எதிலும் கலப்படம், சுரண்டல், ஊழல், ஏமாற்று வேலைகள் போன்ற செயல்கள்தான் அன்றாடம் அரங்கேறுகின்றன. இதனால் நுகர்வோர்களாகிய பல அப்பாவி மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். 'வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்தில் ஓர் அதிமுக்கிய வருகையாளர்; அவர், நம்மைச் சார்ந்து இல்லை... நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம்' என்று எல்லா வணிக நிறுவனங்களும் நுகர்வோர்களுக்கு மதிப்பளித்து, நேர்மையான முறையில் நடந்துகொண்டால் எந்தவொரு நுகர்வோரும் ஏமாற்றப்பட மாட்டார். ஆனால், அப்படியில்லையே இன்றைய சந்தை உலகம்? எப்படியாவது நுகர்வோரை ஏமாற்றிப் பணம் பறிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. காலாவதியான, கலப்படமான பொருட்களை விற்பதும், அச்சிடப்பட்ட விலைக்கு மேல் பொருட்களை அதிகம் விலைவைத்து விறபதும், அதற்கான ரசீதுகளைத் தராமல் இருப்பது மூலமாகவுமே இன்றைய நுகர்வோர்கள் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். உதாரணத்துக்கு, பால் பாக்கெட் ஒன்றின் விலை 25 ரூபாய் என்று இருந்தால், நாம் அவசரத்தில்... அதற்கான விலையைப் பார்க்காமல் கடைக்காரர் சொல்லும் விலையையே காசு கொடுத்து வாங்கிவருகிறோம். அத்துடன், அது காலாவதியான பால் பாக்கெட்டா என்றும் பார்ப்பதில்லை. இதனால், நம்முடைய பணம் கூடுதலாய்ச் செலவழிக்கப்படுவதுடன், உடலும் நலமில்லாமல் போகிறது.
நுகர்வோரின் உரிமைகள்!
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஓர் உறுப்பினர், ''நாம் எப்போதும் விழிப்புடன் இருந்தாலே ஏமாற்றத்துக்கு விடை காணலாம். சரியான கவனத்துடன் இருக்க நுகர்வோராகிய நாம் எப்போதும் தயாராய் இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்காகவே நுகர்வோர் நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோரால் கொண்டு செல்லப்படும் வழக்குகளுக்கு அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு சொல்லப்படும். நுகர்வோர் நலனை உறுதிசெய்ய மத்திய அரசு பலப்பல சட்டங்களையும், அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. 1986-ல் உருவான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஒரு மைல்கல்லாகச் சொல்லப்படுகிறது. மாவட்ட, மாநில, தேசிய அளவில்கூட தற்போது நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புகள் உருவாகி மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன. நுகர்வோர்க்கு... பாதுகாப்பு, தகவல் பெறுதல், தேர்ந்தெடுத்தல், முறையிடுதல், குறைதீர்த்தல், நுகர்வோர் கல்வி, சுற்றுச்சூழல், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றுக்கான உரிமைகள் உள்ளன. இவற்றின்மூலம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பொருள்கள், உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்; தேவையான பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்; தரமற்ற பொருள்கள், சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்டஈடு பெறலாம்'' என்று சொல்லும் அவர், நுகர்வோர் பின்வருவனவற்றை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
''நுகர்வோர்கள் பெரும்பாலும் தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்த்தல் வேண்டும்; பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் விலை, தேதி, தரம், முத்திரை போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும்; பொருள்களுக்குரிய ரசீதுகளைக் கம்பெனி பெயர், முத்திரை மற்றும் கையொப்பத்துடன் பெறவேண்டும்; தவறு நடக்கும்பட்சத்தில் அதைத் தைரியத்துடன் எதிர்கொள்ள முன்வர வேண்டும்; மொத்தத்தில் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்'' என்று, நுகர்வோர் விழிப்பு உணர்வுடன் இருப்பதற்குரிய வழிமுறைகளைச் சொல்லும் அவர், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எப்படி வழக்குத் தொடுப்பது என்பதையும் இப்படித் தெளிவாகச் சொல்கிறார்.
''நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்கள் மூலம், மாவட்ட அளவிலான நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் வரையும், மாநில அளவிலான நீதிமன்றங்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரையும் நஷ்ட ஈடு வழங்கவும், அதற்குமேல் தேசிய நுகர்வோர் நீதிமன்றமும் வழங்க அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, நுகர்வோர் நீதிமன்ற ஆணைகளை மதிக்கத் தவறுவோர் நீதிமன்ற அவமதிப்பு குற்றங்களுக்கு உள்ளாவார்கள். 90 நாட்களுக்குள் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதனைச் சாத்தியப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர் முதலில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில்தான் மனுத்தாக்கல் செய்யவேண்டும். நுகர்வோர் அமைப்புகள் மூலமாகவும் வழக்குத் தொடரலாம். மாவட்ட நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை எனில், மாநில நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்து வழக்குத் தொடரலாம். என்னதான் வழக்கு என்று நீதிமன்ற வாசல்களைத் தேடி ஓடுவதைவிட எப்போதும் நுகர்வோர் விழிப்புடன் இருந்தால் யாரும் ஏமாற்ற முடியாது என்பது நிச்சயம்'' என்கிறார், அவர்.
விழிப்புடன் இருப்போம்... ஏமாற்றத்திலிருந்து விடுபடுவோம்!
0 comments:
Post a Comment