Monday, October 29, 2018



எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த ‘கவிஞர்’ வாலியின் பிறந்த தினம் - அக்டோபர் 29:

பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். ‘நேதாஜி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.

சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், ‘வாலி’யான ரகசியம் இதுதான்.

சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ‘ஆண்டவனே’ என்பார். சிவாஜிக்கோ இவர் ‘வாத்தியார்’. வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.

விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.

காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.

வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், ‘தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே’ என்பார் பெருமையாக.

தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.

கோபம் அதிகம். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். ‘‘பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம்’’ என்றார் சூடாக!

15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். ‘வடைமாலை’ என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.

பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.

0 comments:

Post a Comment