ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும், மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து வைக்கிறார். உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை, இதற்கு கிடைக்கவுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது.சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில் முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று, அவரது சிலையை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்; இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில அரசு செய்துள்ளது. தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக, சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
135 டன் இரும்பு நன்கொடை
'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படும், சர்தார் வல்ல பாய் படேல் சிலை, குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில், நர்மதா நதியின் நடுவில் அமைந்துள்ள, 'சாது பேட்' எனப்படும் தீவில் நிர்மாணிக்கப்பட்டுஉள்ளது. இந்த தீவுக்கு செல்ல, 250 மீட்டர் நீள இணைப்பு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள, 7 லட்சம் கிராமங்களில் இருந்து, விவசாய கருவிகள் சேகரிக்கப்பட்டு, அதில் இருந்த இரும்புகள் எடுக்கப்பட்டு, சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில், 135 டன் இரும்பை, விவசாயிகள் நன்கொடை அளித்துள்ளனர். சிலை உள்ள பகுதியில், 52 அறைகள் உள்ள கட்டடம், மூன்று நட்சத்திர ஓட்டல், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்தார் படேலின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையிலான பொருட்கள், அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.சிலையின் மேற்பகுதியில், 200 பேர் நின்று பார்க்கும் வசதி உள்ளது. இங்கிருந்து சர்தார் சரோவர் அணை மற்றும் விந்திய சாத்பூரா லைப்பகுதிகளை, 200 கி.மீ., துாரம் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment