பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் வகை நீரிழிவு நோய்
பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது. இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.
இரண்டாவது வகை நீரிழிவு நோய்.
உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய்.
சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.
நான்காவது வகையான நீரிழிவு நோய்.
சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.
0 comments:
Post a Comment