Thursday, November 8, 2018

ஒரு மலை பிரதேசத்தில் குரங்குகள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. கையில் கிடைத்ததை, பிடித்தால் உண்பதும், பிடிக்காவிட்டால் தூக்கி எறிவதும் குரங்குகளின் குணம். ஒரு சமயம் பயங்கர காற்றுடன் லேசான மழை பெய்தது. நடுங்கும் குளிர் மலை பிரதேசத்தை சுற்றி வசித்து வந்த ஜீவராசிகளை வாட்டி வதைத்தது.

குரங்குகள் குளிரால் நடுங்கி, "எங்கே சென்று குளிரை போக்கிக் கொள்வது' என்று யோசித்தன. அப்போது குரங்குகள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறிய குரங்கு, சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் சிவப்பு நிற பூக்களை பார்த்து, அவை நெருப்பு குவியல் என்று நினைத்து தன் கூட்டத்தாரிடம், ""அங்கு சென்றால் குளிரை போக்கிக் கொள்ளலாம்,'' என்று கூறியது.

சிறிய குரங்கு கூறியதை கேட்ட மற்ற குரங்குகளும் மரத்தடிக்கு சென்று அங்கு குவியலாக கிடந்த மின்னும் சிவப்பு பூக்களை சுற்றி அமர்ந்து கொண்டு, தங்கள் இரு கைகளையும் தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டு நடுநடுங்கியபடி இருந்தன. முட்டாள் குரங்குகள் மின்னும் சிவப்பு பூக்களை நெருப்பு என்று நினைத்தன. மனிதர்கள் சில நேரங்களில், தங்கள் குளிரை போக்கிக்கொள்ள நெருப்பை சுற்றி அமர்ந்திருப்பர். நெருப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதை போல், மின்னும் பூக்களும் சிவப்பு நிறத்தில் இருந்ததால், பூக்களை நெருப்பு என்று நினைத்தன குரங்குகள்.

குரங்குகள் அமர்ந்திருந்த மரத்துக்கு மேலே ஒரு பறவை கூடு கட்டி தன் குடும்பத்தோடு வசித்து வந்தது. குரங்குகளின் நடவடிக்கைகளை நீண்ட நேரமாக கவனித்துக் கொண்டிருந்த பறவை, குரங்குகளை பார்த்து பரிதாபப்பட்டது. அது குரங்குகளில் மூத்த குரங்கை அழைத்து, ""குரங்கு அண்ணா! நீங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நீங்கள் எந்தப் பொருளை சுற்றி அமர்ந்திருக்கிறீர்களோ அது நீங்கள் நினைப்பது போல் நெருப்பு அல்ல... அது வெறும் மின்னும் சிவப்பு நிற பூக்கள்,'' என்றது பறவை.

பறவை சொல்வதை தன் காதில் வாங்காத குரங்குகளின் தலைவன், நடுங்கும் உடலோடு பேசாமல், மின்னும் சிவப்பு பூக்கள் முன்னால் உட்கார்ந்து விட்டது. நேரம் ஆக, ஆக குளிர் அதிகமாகி குரங்குகளுக்கு நடுக்கமும், உடலில் ஆட்டமும் கண்டது.

குரங்குகள் குளிரில் நடுங்குவதை கவனித்துக் கொண்டிருந்த பறவை மரத்தில் இருந்தபடியே மீண்டும் குரங்குகளை பார்த்து, ""சகோதரர்களே! உங்களுக்கு முன்னால் இருப்பது வெறும் மின்னும் சிவப்பு நிற பூக்கள், நெருப்பு அல்ல... பூக்களிடம் இருந்து உங்கள் குளிரை போக்க சூடு கிடைக்காது வெறும் வாசனைத்தான் கிடைக்கும். வானத்தில் கருமேக கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக் கிறது. எந்த நேரத்திலும் மழை பெய்ய நிறைய வாய்ப்புள்ளது. நேரத்தை வீணாக்காமல் நீங்கள் தற்போது வசித்து வரும் மலைக்கு அருகில் குகை ஏதாவது தென்பட்டால், அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்,'' என்றது பறவை.

பறவை தொடர்ந்து தங்களுக்கு அறிவுரை கூறுவதை கேட்ட குரங்குகள் கூட்டம் கோபம் கொண்டு பறவையை பார்த்து, ""பறவையே! எங்களுக்கு அறிவுரை கூறுவதை இத்துடன் நிறுத்திக்கொள். உனக்கு இரண்டு கால்கள் மட்டுமே தான் உள்ளது. ஆனால், எங்களுக்கோ இரண்டு கால்களும், இரண்டு கைகளும் உள்ளன. எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும்,'' என்று கூட்டத்தில் இருந்த அத்தனை குரங்குகளும் போட்டி போட்டுக் கொண்டு, மாறி, மாறி பறவையை ஏளன பார்வையால் அவமானப்படுத்தின. குரங்குகளால் எவ்வளவு அவமானப்பட்டாலும் பறவைக்கு குரங்குகள் மேல் இருந்த அனுதாபம் குறையவில்லை.

அது குரங்குகளை பார்த்து, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

""இந்த நிமிடமே நிறுத்திக் கொள்... நாங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம். நீ தொடர்ந்து உபதேசம் செய்துக்கொண்டிருக் கிறாய். எங்கள் வேதனை உனக்கு புரியவில்லை,'' என்று கோபத்தோடு திட்டியது குரங்குகளின் மூத்த குரங்கு.

குரங்குகளின் மூத்த குரங்கு திட்டியதைப் பற்றி சற்றும் கவலைப்படாத பறவை, குரங்குகளை சீக்கிரமாக மரத்தடியை விட்டு விரைவில் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு நயமாக கூறியது. குரங்குகளின் தலைவனும் பறவையும் பேசிக் கொண்டிருக்கும்போதே, வயதில் சிறிய குரங்கு ஒன்று, பறவை வசித்து வந்த மரத்தின் மீது மளமளவென ஏறி பறவையை பிடித்து, அதன் இறகுகளை பிய்த்து எறிந்து, பறவையை தூக்கி வீசியது.

பறவையின் அறிவுரையை சற்றும் பொருட்படுத்தாத குரங்குகள், மின்னும் சிவப்பு பூக்கள் முன்னால் அமர்ந்தபடியே குளிரில் நடுங்கி, சில குரங்குகள் மாண்டன. சில குரங்குகள் நோய் வாய்ப்பட்டன. சில குரங்குகள் பறவை சொல்லை கேட்டு, மலைக்கு அருகில் இருந்த குகையில் தங்கி உயிர் பிழைத்தன.

இறகுகளை இழந்த பறவையும் தன் அறிவுரையை கேட்டு, சில குரங்குகளாவது உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. ஆனாலும் முட்டாள்களுக்கு அறிவுரை கூறினால் அது தனக்கே ஆபத்தாக முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டது.
***

0 comments:

Post a Comment