இன்று பிறந்தநாள்:- ஜூலை-29.தொழுநோயை உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்னும் பாக்டீரியாவை 1873 இல் கண்டுபிடித்த நார்வே மருத்துவர்-கெரார்டு என்றீக்கு ஆர்மவுர் ஆன்சன் (Gerhard Henrik Armauer Hansen,) பிறந்த தினம்.
பிறப்பு:-ஆன்சன் நோர்வேயில் பெர்கன் என்னும் ஊரில் ஜூலை-29 1841 இல்பிறந்தார், பின்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகத்தில் (இப்பொழுது இது ஓசுலோ பல்கலைக்கழகம் என அழைக்கப்பெறுகின்றது) மருத்துவப் படிப்புப் படித்து, 1866 இல் பட்டம் பெற்றார். பிறகு சிறிது காலம் உள்மனைப் பயிற்சியாளராக ஓசுலோவில் கிறித்தீனாவில் உள்ள தேசிய மருத்துவ மனையில் பயிற்சி பெற்றார்.
பணிகள்:-
இலோஃபோட்டன் (Lofoten) என்னும் இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1868 இல் பெர்கனுக்குத் திரும்பி தானியல் கார்னேலியசு தானியல்சன் (Daniel Cornelius Danielssen) என்னும் தொழுநோய் வல்லுநரிடம் சேர்ந்து தொழுநோயைக் கூர்ந்து படித்தார்.
கண்டுபிடிப்புகள்:-
தொழுநோய் என்பது மரபாக வரும் நோய் என்றே அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டு இருந்தது (இதனை மியாசுமா நோய்க் கொள்கை (miasma theory) என்றழைத்தனர். ஆனால் ஆன்சன் தன்னுடைய முறையான நோய்ப் பரவல் இயல் ஆய்வுகளின் படி தொழுநோயானது ஒரு குறிப்பிட்ட நோயுண்டாக்கியால் ஏற்படும் நோய் என்று கண்டறிந்தார். 1870-71 ஆகிய காலப்பகுதியில் ஆன்சன் இடாய்ச்சுலாந்தில் உள்ள பான்நகரத்துக்கும், வியன்னா நகரத்துக்கும் சென்று தன் கருதுகோளை நிறுவுவதற்கான பயிற்சியைப் பெற்றார் 1873 இல், ஆன்சன் தான் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே (Mycobacterium leprae) என்னும் பாக்டீரியம் தொழுநோய் இழையத்தில் (திசுக்களில்) இருப்பதால் நோய் உண்டாகின்றது என்று அறிவித்தார், ஆனால் குறிப்பாய் இந்தப் பாக்டீரியத்தை அவர் பிரித்துக் காட்டவில்லை. பலரும் இவருடைய கண்டுபிடிப்பை ஏற்கவும் இல்லை. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு பின்னர் இன்னும் திறம்வாய்ந்த புதிய நுண்ணோக்கிகளின் உதவியால் நிறுவப்பட்டது.
1879 இல் ஃகான் இந்த நோயுற்ற இழையங்களை ஆல்பர்ட்டு நைசர் (Albert Neisser) என்பாரிடம் கொடுத்து அவர் தக்கவாறு சாயமேற்றல்முறைகளின் படி சாயமேற்றி 1880 இந்தப் பாக்டீரியத்தின் கண்டுபிடிப்பை, தொழுநோயுண்டாக்கும் நுண்ணுயிரி என உறுதிப்படுத்தினார். இதன் பின் நைசருக்கும் ஆன்சனுக்கும் இடையே சிறு பிணக்கு இருந்தது; ஆன்சன் இந்தக் கோலுயிரியைக் (குச்சி போன்ற வடிவுடைய நுண்ணுயிரி) கண்டுபிடித்தார் என்றும், இதனைத் துல்லியமாக அடையாளப்படுத்திக் காட்டியவர் நைசர் என்றும் அறியப்படுகின்றது. ஆன்சனின் பங்கை நைசர் குறைத்து மதிப்பிட்டார் என்று கூறப்படுகின்றது. தனியான செயற்கையான வளர்ப்பூடகத்தில் நுண்ணுயிரி வாழ்கூட்டத்தை தரமுடியாது போனதால் ஃகானசனில் கண்டுபிடிப்பைக் குறைவாகக் கருதினார்கள்.
ஆன்சன் நோர்வேயில் தொழுநோய்க்கான மருத்துவராகத் தொடர்ந்தார், பெரும்பாலும் இவருடைய முயற்சிகளால் நோர்வேயில் 1877, 1885 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தொழுநோய் பற்றிய சட்டங்களால் அங்கே தொழுநோய் உற்றவர்களின் எண்ணிக்கை நிலையாகக் குறைந்துகொண்டே வந்தது. 1875 இல் நோர்வேயில் 1,800 தொழுநோய் உற்றவர்கள் இருந்தார்கள், ஆனால் இது 1901 இல் 575 பேராகக் குறைந்தது.
மறைவு:-
பிப்ரவரி-12, 1912 ஆம் ஆண்டு, தனது,70 வது வயதில்
ஃப்ளோரே, நோர்வேயில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவருடைய மருத்துவப் பங்களிப்புகளை 1909 இல் பெர்கன் நகரில் நடந்த அனைத்துலக தொழுநோய் பேராயக் கூட்டத்தில் போற்றிப் பெருமை செய்யப்பட்டது.
பெர்கன் நகரில் மருத்துவக் கண்காட்சி ஆன்சனின் பெயரில் உள்ளது. இது தொழுநோய் அருங்காட்சியகம் என வழங்கப்பெருகின்றது. பெர்கன் பல்கலைக்கழகத்தில் இவர் பெயரால் ஆய்வுச்சாலை ஒன்று உள்ளது (Armauer Hansen Building).
செரூசலத்தில் 1950 இல் இருந்து தொழுநோயகம் (leprosarium) ஒன்று இவர் பெயரால் உள்ளது
0 comments:
Post a Comment