Wednesday, July 3, 2019

உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும், நேர்மையின் இலக்கணமான சகாயம் என்பவர் ஒரு மேடையில் விவசாயிகள் பற்றி இவ்வாறு கூறினார், “நான் ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அங்கே கோவணம் கட்டியிருந்த விவசாயி ஒருவரைப் பார்த்து நான் அவரோடு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அவர் அருகில் சென்றேன். அவரோ ‘அய்யா, நான் கோவணம் கட்டி உங்க கூட நின்றால் நன்றாகவா இருக்கும்’ என்றார். அவரை அழைத்து நான் உங்களோடு புகைப்படம் எடுப்பதை மிக கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன் எனக் கூறி அவரோடு எடுத்த புகைப்படத்தை, தனது அலுவலக முகப்பில் பெரிய அளவில் மாட்டினார். காரணம் கேட்ட சக அலுவலர்களைக் கண்டு, இந்நாட்டிற்கு சோறுபோடும் விவசாயியை கௌரவப்படுத்தாமல், நான் வேறு எவர்களை கௌரவப்படுத்த?” என்றார்.
vivasaayi7எந்தெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும் என்ற வித்தை நம் விவசாயிகளுக்குத் தெரியும்.
கரிசல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, திணை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்கு விளையும்.
வண்டல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, நெல், மிளகாய், கோதுமை, கேழ்வரகு, வாழை, மஞ்சள், பழ மரங்கள் விளையும்.
செம்மண்: இதில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, நிலக்கடலை, பழ மரங்களும் நன்கு விளையும்.
சாம்பல் நிற மண்: இதில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை விளையும்.
கருமணல் மண்: கரும்பு, சாமை, தட்டைப்பயிறு, முருங்கை என சில பயிர்கள் மட்டுமே விளையக்கூடியது.
கந்தக மண்: இம்மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, திணை, கம்பு, ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.
இவ்வாறு அறிவுமிக்க நம்முன்னோர் விவசாயிகளின் வழி வந்த, இன்றைய விவசாயிகள் படும்பாடு பெரும்பாடாக உள்ளது. மாதம் மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைந்த தமிழ்மண்கள் எல்லாம், இப்போது எந்த மாரியும் பெய்யாமல், வானம் பார்த்த பூமியாக வாடிக்கிடக்கிறது விவசாயிகளின் நிலங்களும், வாழ்க்கையும்.
meeththen1‘கடன் கொடுக்கிறோம், விவசாயம் செய்’ – எனக் கூறிவிட்டு, இன்று வெளிநாட்டுக்காரன் தந்த விதையை போடச்சொல்லி, விளைச்சலே இல்லாமல் விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள். விவசாயம் செய்து பிழைக்கத்தான் வழியில்லை என்று, பணம் படைத்தவர்களுக்கு நிலத்தை விற்றுவிட்டு, பட்டணத்து வீதிகளில் இரவுக் காவலர்களாகவும், கூலி வேலைக்காரர்களாகவும் படையெடுத்து வந்துள்ளனர் விவசாயிகள்.
கிராமத்தில் நடக்கின்ற பாதையில் மாடு சாணி போட்டுவிட்டுச் சென்றால், அதை அப்படியே அள்ளி பக்கத்து வயல்களில் வீசிவிட்டுச் செல்வார்கள் நம் விவசாயிகள். அந்த சாணியும் அந்த வயலுக்கு உரமாகும். எதைச் செய்தாலும் அடுத்தவனுக்கு நல்லது செய்ய வேண்டும், சாணி கூட உரமாகிப் போக வேண்டும் என்று நினைக்கிற படிக்காத விவசாயிகள் கிராமத்தில் இருந்தனர். ஆனால் இன்று படித்தவர்கள் விதைக்குக் கூட உரிமை கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டுக்காரனிடம் காசை வாங்கிக் கொண்டு, மண்ணை மலடாக்கி விவசாயத்தை நாசமாக்கும் விதைகளை விவசாயிகள் தலையில் கட்டுகின்றனர்.
நம் அரசு, நம் தமிழக விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறோம் என்ற பெயரில் இங்கிருக்கும் விவசாயிகளை எப்படி ஏமாற்றுகிறது என்பதை (செ.நல்லசாமி – விவசாயிகள் சங்க கூட்டமைப்பு) ஒரு விவசாயி கூறுவதை நீங்களே படியுங்கள்.
முன்பு, அரசு எங்களுக்கு 8 லட்சம் கோடி கடன் ஒதுக்கினார்கள். இப்போது 8 ½ லட்சம் கோடி கடன் ஒதுக்குகிறார்கள். ஆனால் இந்த விவசாயக் கடன் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் உங்களுக்குத் தெரியுமா? ஒரு பென்ஸ் கார் வாங்கலாம் என்றால், உடனே 7 சதவிகிதம் வட்டிக்கு இந்தக் காரைக் கொடுக்கிறார்கள். இதற்கு ஆர்.சி புத்தகத்தைக் கொண்டு போய் கொடுத்தால் 10 நிமிடத்தில் கடன் கொடுக்கிறார்கள்.
vivasaayi3நான் விளை நிலம் வைத்திருக்கிறேன், இந்த விளைநிலத்தில் சாகுபடி செய்ய கடன் கொடுங்கள் என்று கேட்டால், என்னென்ன ஆவணங்கள் கேட்கிறார்கள் தெரியுமா? மூலப்பத்திரம் கொண்டுவா, சிட்டா கொண்டு வா, பட்டா கொண்டு வா, ஆர்.எஸ்.ஆர் கொண்டு வா, அடங்கல் கொண்டு வா, எப்.எம்.பி கொண்டு வா, டோபேஜ் கொண்டு வா, ஜாமீன்தாரரை அழைத்து வா, இவரின் சொத்து சான்றிதழ் கொண்டு வா, அக்கம் பக்கம் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று “NO DUE” சான்றிதழ் வாங்கி வா, 50 ஆயிரத்திற்கு மேல் வாங்கினால் அதை அடமானம் வைக்க வேண்டும், அதற்கு பணம் தர வேண்டும், நீ உழவனா இல்லையா எனத் தெரிய உழவன் அட்டை கொண்டு வா என்று இத்தனையும் வாங்க, ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு உழவன் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் தெரியுமா?
இந்தக் காரை விடிவதற்குள் அக்குவேர், ஆணி வேராகப் பிரித்து கழற்றிப் போட்டு விடலாம், ஆனால் விளை நிலத்திற்கு சக்கரமா இருக்கிறது, தள்ளிக்கொண்டு போவதற்கு?,இதை எளிமையாக்க வேண்டாமா? கடந்த 66 ஆண்டுகளாக இதை எளிமையாக்கி இருக்கிறார்களா?. சரி, நான் 2 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்கிறேன், கடன் வாங்குகிறேன், கடன் கொடுத்த பணத்தின் பாதுகாப்பிற்காக இந்த வங்கி, எங்களின் பயிர்களை காப்பீடு செய்து விடுகிறார்கள். என்னையும் கேட்காமலேயே திரும்ப எனக்கு கொடுக்கக் கூடிய தொகையில் இருந்தும் அவர்கள் கடன் பணத்தை பிடித்துக் கொள்கிறார்கள். என்னுடைய பயிர் ஒரு வறட்சியினாலயோ, வெள்ளத்தினாலையோ, நெருப்பினாலேயோ, மிருகங்களாலோ பாதிக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் அல்லவா? இதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?,அன்னாவாரி சான்றிதழ் வாங்கிக் கொண்டு வா என்கிறார்கள். அந்த 10 வருவாய் கிராமங்கள், ஒரு வட்டாரமே பாதிக்கப்பட்டால் அந்த காலத்தில், ஆங்கிலேயன் காலத்தில் கொடுத்தார்கள். வரிகளை எல்லாம் தள்ளுபடி செய்தார்கள். ஆனால் இன்று இந்த சான்றிதழ் கொண்டு வந்தால் தான் இழப்பீடு வழங்க முடியும் என்கிறார்கள். நான் 40 வருவாய் கிராமத்திற்கு காப்பீட்டுப் பணம் கட்டுவேனா? இல்லை எனது இரண்டு ஏக்கருக்கு கட்டுவேனா?.
சரி, நான் இப்போது ஆயுள் (இன்சூரன்ஸ் பிரிமியம்) காப்பீடு கட்டுகிறேன். திடீரென நான் இறந்து விடுகிறேன். எனது வாரிசுகள் வந்து இழப்பீடு கேட்டால் “உனது அப்பா இறந்தால் மட்டும் கொடுக்க மாட்டோம், உங்கள் கிராமத்தில் உள்ள அத்தனை பேரும் முடிந்தால்தான் கொடுப்போம் என்றால், சுனாமி போல் வந்து ஊரையே சுருட்டிக் கொண்டு போன பின் இழப்பீடு வாங்க யார் இருப்பார்கள்?.இதுவரை எந்த விவசாயிகளும் காப்பீட்டில் இழப்பீடு வாங்கியதாகச் சரித்திரம் இல்லை. விவசாயிகள் முழுவதும் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்களின் அறியாமையைத் தொடர்ந்து 66 ஆண்டுகளாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
adukkalai ariviyal335 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அதிகம் விளைந்தது, ஆனால் விற்க முடியவில்லை. விவசாயிகள் அங்கு தற்கொலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு கொள்முதல் செய்து சமுத்திரத்தில் கூட கொட்டினார்கள், ஆனால் தீர்வு ஏற்படவில்லை. எத்தனால் தயாரித்தார்கள் வாகன எரிபொருளாக பயன்படுத்தினார்கள், பின்பு இப்பிரச்சனை தீர்ந்தது. இதே காலகட்டத்தில் பிரேசில் நாட்டிலும் இதே நெருக்கடி வந்தது. வாகன எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்தினார்கள். இன்றோ ஒலிம்பிக் போட்டியை தனது நாட்டில் நடத்தும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.
இதே போல நம் நாட்டிலும் உருளைக் கிழங்கு அதிகம் விளைகிறது. இதை எல்லாம் ஏன் எத்தனாலாக மாற்றக்கூடாது?, ஏன் அயல் நாடுகளில் எரி பொருளுக்குக் கையேந்திக் கொண்டு நிற்கிறீர்கள்?. எல்லாம் கேவலமான கமிசனுக்காக இன்று நம் நாட்டை ஆள்வது மந்திரிகள் அல்ல, பிரதமர் அல்ல, குடியரசுத்தலைவர் அல்ல, ஏன் இதற்கு முன்பு இருந்த அரசும் அல்ல, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கிறது, இவர்கள்தான் அதிகாரத்தில் இருக்கும் இந்த பொம்மைகளை ஆட்டிவைக்கின்றனர்.
சரி ஏன் எத்தனாலுக்கு மாற நம் அரசு மறுக்கிறது?, இதில் விவசாயிகள் எப்படி இவர்களால் சுரண்டப்படுகிறார்கள் தெரியுமா?. 1966-ல் கரும்பு கட்டுப்பாட்டு ஆணை வந்தது. இந்தக் கரும்பில் இருந்து எடுக்கக்கூடிய சர்க்கரைக்குத்தான் இவர்கள் பணம் கொடுக்கிறார்கள். ஆனால் கரும்பில் உள்ள மொலாசசுக்கு பணம் கொடுப்பதில்லை, கரும்பு சக்கைக்கு பணம் கொடுப்பதில்லை, இதிலிருந்து எடுக்கக்கூடிய மின்சாரத்திற்கோ, காகிதத்திற்கோ பணம் கொடுப்பதில்லை. ஆக இன்று விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின்சாரம் தருகிறார்கள்? இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் 2851 கோடி இலவச மின்சாரத்திற்குக் கொடுக்கிறார்கள். அரசு விற்கும் மது மூலம் எவ்வளவு வருமானம் அரசுக்கு வருகிறது, 30 ஆயிரம் கோடி வருகிறது.
vivasaayi10இந்த மதுபானம் தயாரிக்க மூலப்பொருள் என்ன மொலாசசு. இதை விவசாயி உனக்கு இலவசமாக வழங்குகிறான். முப்பதாயிரம் கோடியை விவசாயி இலவசமாக இந்த அரசுக்கு வழங்குகிறான் என்று இதுவரை இந்திய நாட்டில் எவனாவது வாயைத் திறந்திருக்கிறானா?
இலவச மின்சாரம் வழங்குவதால்தான், ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வைத்து கட்டணம் கட்டுகிறோம். ஆனால் டாஸ்மாக் மது மூலம் 30 அயிரம் கோடி வருமானம் வருகிறதே, இதற்கு உண்டான மூலப்பொருளை எங்கள் விவசாயிகள் இலவசமாக அரசுக்கு வழங்குகிறார்களே.. அதைப் பற்றி இங்கு ஒருவனாவது பேசுகிறானா?
என்ன நாடு இது? விவசாயிகளின் அறியாமையை அறுவடை செய்யும் இந்த நாடு ஒரு நாடா? இங்குள்ள ஒவ்வொரு விவசாயிகளும் கவரிமான் போன்றவர்கள், மயிர் நீப்பின் வாழா கவரிமான் “உயிர் நீப்பர் மானம் பெறின்”-என்ற முன்னோர் கூற்றுக்கேற்ப, கடனைக் கட்ட முடியாமல் மானத்திற்குக் கட்டுப்பட்டு தூக்குக்கயிற்றை முத்தமிடுபவர்கள் – இது ஒரு தேசிய அவமானம். விவசாயிகள் எப்படி அரசை நம்பியும், வங்கிகளை நம்பியும் ஏமாறுகிறார்கள் என்று கூறிய கருத்துக்களை எவரும் மறுக்க முடியாது.


ஆதலால் நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். விவசாயத்தை மறந்த, அழித்த எந்த ஒரு இனமும் மண்ணில் உயிர் வாழ முடியாது. இரவு பகலாக கண் விழித்து கணிப்பொறியில் நாம் என்னென்ன வேலைகளோ செய்யலாம். ஆனால் கணிப்பொறி பயன்படுத்தும் எவரும் ஒரு நெல்மணியை விளைய வைக்க முடியாது என்ற உண்மையை மனதில் வைத்து விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் படித்த நாம் உறுதுணையாய் இருப்பது நமது கடமையாகும்.

0 comments:

Post a Comment