Wednesday, July 3, 2019

முதியோர் தங்கள் வாழ்நாளில் உழைத்து சமூகப் பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியவர்கள். ஆனால் பெரும்பான்மையானோர் பொருளாதாரப் பாதுகாப்பின்றி, உரியவர்களால் அக்கறைக் காட்டப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மனிதர்களின் இரண்டாம் குழந்தைப் பருவம் எனப்படும் முதுமை உலக அளவில் அனைத்துத் தரப்பினராலும் அக்கரையுடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகிவிட்டது. இந்திய அரசு 1999ஆம் ஆண்டு வகுத்துள்ள வயதானோருக்கான தேசிய கொள்கையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரை மூத்தக் குடிமக்கள் என்று வரையறுத்துள்ளது.
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நம் நாட்டில், விஞ்ஞான வளர்ச்சி மற்றும் மருத்துவ வசதிகளின் விளைவாக மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதால், முதியோர்களின் என்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2011ஆம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 10.5% பேர் முதியோர் ஆவர். கேரளாவிற்கு அடுத்தபடியாக அதிக முதியோர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

முதியோர் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள்

பலகீனம், ஞாபகமறதி, காரணமில்லாத எரிச்சல், கோபம், நோய், முதுமையால் உடல் தளர்வு, மற்றவரால் புறக்கணிக்கப்படுதல், தனிமை, வறுமை மற்றும் சமூக அந்தஸ்த்தில் சரிவு போன்றவை முதியோர் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளாகும். இப்பிரச்சனைகள் தோன்ற மூல காரணம் பராமரிப்பின்மை, வருவாய் ஈட்டாமை, வாரிசுகளின் உதாசீனப்போக்கு, வயதாவதால் ஏற்படும் முதுமை மற்றும் வேலையின்மை போன்றவையாகும்.

முதியோருக்கான நலத்திட்டங்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்டறியப்பட்ட இலக்கு மக்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இலக்கு மக்கள் பட்டியலிலுள்ள இருபாலரையும் கொண்டு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படுவது போல் 55 வயதுக்கு மேற்பட்டோர்களைக் கொண்டு முதியோர் சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், முதியோருக்கான சமூக சுகாதார மையம் மற்றும் ஆதரவற்ற முதியோருக்கான சமூக உணவு பாதுகாப்பு திட்டம் போன்றவையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

முதியோர் சுய உதவிக் குழுக்கள்


முதியோர்களை, திறனுடைய அல்லது வருவாய் ஈட்டக் கூடிய முதியோர், உழைக்கத் திறனற்ற அல்லது குறைந்த திறனுடைய முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ள அல்லது திறனற்ற முதியோர் என மூன்று வகைப்படுத்தலாம். இம்மூன்று வகையினரில் முதல் இரண்டு வகையினரைக் கொண்டு முதியோர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இதற்கான முன்னோட்டமாக திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

0 comments:

Post a Comment