Tuesday, July 30, 2019



ந்தப் பெண் குழந்தை பிறக்கும்போதே ஆரோக்கியம் இல்லாமல் பிறந்தது. ஆனாலும், அந்தக் குழந்தைக்கு அதன் அம்மா தாய்ப்பால் ஊட்டவில்லை. எப்போதும் கடுமையான வயிற்றுப்போக்கு இருந்தது அந்தக் குழந்தைக்கு. அதனால் மெலிந்து நோஞ்சானாகவே இருந்தது. இதோடு கடுமையான சளியும் சேர்ந்துகொண்டது. பள்ளியில் படிக்கும்போது கிட்டப்பார்வை ஏற்பட்டு கண்ணாடி அணியும் அவசியம் அந்தப் பெண்ணுக்கு வந்தது. இந்தத் துன்பத்துடன்தான் மெட்ரிகுலேஷன் படித்தார்.அடுத்து இன்டர்மீடியேட் போனார். உடல் ஒத்துழைக்கவில்லை. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டார். மருத்துவம் படிக்கப் போனார். அப்போது ஆஸ்துமா ஏற்பட்டது. பல இரவுகளில் மூச்சு முட்டி அவரால் தூங்க முடியாது. மோசமான இழுப்பு ஏற்பட்டு செத்துச் செத்துப் பிழைத்தார். ஆஸ்துமாவில் இருந்து மீளவே முடியவில்லை.
அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகியது. மூத்த மகன் பிறந்தான்அந்தப் பையனுக்கு கக்குவான் இருமல் பாதிப்பு அதிகம் இருந்தது. அவனைப் பெற்று எடுப்பதே இந்தப் பெண்ணுக்குச் சிரமமாக இருந்தது. குழந்தைக்கும் தாயிடம் இருந்து பால் குடிக்கும் சக்தி இல்லை. வலிப்பு நோயும் இருந்தது. இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. பிறந்த குழந்தையின் கண்ணைக் கழுவும்போது, பயன்படுத்தக் கூடாத திரவத்தைப் பயன்படுத்திவிட்டார்கள். ஆகையால், அந்தக் குழந்தையின் கண் திடீரென வீங்கிவிட்டது. அதைக் குணப்படுத்தினார்கள். அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்கும் அளவுக்கு இந்தப் பெண்ணுக்கு பால் வளம் இல்லை. எனவே குடல் மந்தமும், மலச்சிக்கலும் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்டது. எடைகூடவே இல்லை.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, முதல் குழந்தைக்கு காய்ச்சல் வந்து, அது வலிப்பாக வளர்ந்தது. நினைவாற்றலும் போனது. தீவிரச் சிகிச்சைக்குப் பின் அந்தக் குழந்தைக்கு நினைவு திரும்பியது. இந்தச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டதால் இரண்டாவது குழந்தையின் ஆரோக்கியமும் கெட்டது. ‘‘மூத்தவனைப் பார்ப்பதால் எனது பால் மாறுதல் அடைந்தது. குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது தாய்க்கு அந்தச் சமயத்தில் ஏதேனும் கவலையோ, வருத்தமோ ஏற்பட்டால் அவளிடம் ஊறும் பாலில் சிறு மாறுதல்கள் உண்டாகின்றன’’ என்று அந்தப் பெண் பிற்காலத்தில் எழுதினார்.
அந்தப் பெண்ணின் முதல் தங்கையும் சிறு வயதில் அம்மை நோயின் பாதிப்புக்கு உள்ளானவர். தொடர் வயிற்றுப்போக்கு அவரது உடல்நலத்தைக் கெடுத்தது. இரண்டாவது தங்கை, திருமணம் செய்து வைத்த சில ஆண்டுகளில் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். ‘‘மனிதனை ஆட்டிப் படைக்கும் இந்தப் பயங்கரமான வியாதிக்குத் தீர்வு தேடுவதில் அன்றில் இருந்து முனைப்பானேன்’’ என்று சபதம் எடுத்தார் அந்தப் பெண்.அன்றைய நீதிக் கட்சி ஆட்சியின் சுகாதார அமைச்சராக இருந்த பனகல் ராஜா இவரை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க உதவிகள் செய்தார். பெண்களை, குழந்தைகளைப் பாதிக்கும் வியாதிகள் பற்றி படித்தார்.
‘‘குழந்தைப் பருவம் முதல் எனது வாழ்க்கையில் நான் ஆரோக்கியமாக இருந்ததே இல்லை” என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்ட அந்தப் பெண்தான்... மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்.
சென்னை மாகாணச் சட்டசபையில் பங்குபெற்ற முதல் பெண். புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் புனித நம்பிக்கையாக இருக்கும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை உருவாக்கியவர். அபலைப் பெண்களின் வாழ்க்கைக்கு அடைக்கலமாக ஓர் இல்லம் வேண்டும் என்று ‘அவ்வை இல்லம்’ தொடங்கியவர். அவர்தான், ‘ஒரு தெய்வம் நேரில் வந்தது’ என்று சொல்லத்தக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.
மனிதகுலத்துக்குச் சேவை செய்ய கட்சி நடத்த வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி எந்தக் கட்சியும் நடத்தவில்லை. ஊருக்கு உழைக்க உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளானவர். நான்கு பேருக்கு நல்லது செய்ய பணபலம் படைத்தவராக இருக்க வேண்டுமா? தனக்கும் தனது கணவருக்கும் கிடைத்த சொற்ப ஊதியத்தை வைத்தே சிறுசிறு காரியங்களைத் தொடர்ந்தார். சமூகத்துக்காக உழைக்க நினைப்பவர்கள் சொந்த பந்தங்களை உதறிவிட்டு குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டுமா? தன்னுடைய பெற்றோர், கணவன், இரண்டு குழந்தைகள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, உறவுத் தங்கையின் குடும்பம்... மொத்தப் பேருக்கும் மையமாக இருந்துகொண்டே சமூக சேவையிலும் இறங்கினார். தான் வேலை பார்த்துக்கொண்டே தங்கை நல்லமுத்துவை படிக்க வைத்தார். அவர்தான் பிற்காலத்தில் ராணிமேரிக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் முதல்வர் ஆனார். அரசியலுக்கு வந்தால் தனது தொழிலை மறந்துவிடவேண்டுமா? ‘மாட்டேன், அரசியலுக்காக எனது மருத்துவத் தொழிலையும் மருத்துவ ஆராய்ச்சியையும் விட்டுவிட மாட்டேன்’ என்று சொன்னவர் அவர். முத்துலட்சுமி பிறந்து வளர்ந்த காலம், வீட்டுக்குள் மட்டும்தான் பெண்ணைப் பார்க்க முடியும் என்ற காலம். வீட்டுப் படியைத் தாண்டினால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். சென்னை மருத்துவக் கல்லூரி ஆண்களால் நிரம்பி இருந்தது. இருந்த பெண்களும் ஐரோப்பியர்களாக இருப்பார்கள். ‘திரை போட்டு மூடிய வாகனத்தில் நான் போவேன்’ என்கிறார் முத்துலட்சுமி. அந்தக் காலத்தில் படிக்கச் செல்லும் பெண்களைத் தெருவில் நின்று கிண்டல் செய்வார்களாம். கல்லூரிப் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு, தனது வகுப்பில் மாணவிகளை உட்காரவே விட மாட்டார். அறுவைச் சிகிச்சை பாடத்தில் முழு மதிப்பெண்ணை முத்துலட்சுமி பெற்ற பிறகுதான் பெண்களும் தனது வகுப்புக்குள் வரலாம், உட்காரலாம் என்று மனம் மாறி இருக்கிறார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக் கல்லூரியின் வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. எழும்பூர் மருத்துவ மனையில் அதுவரை பெண் மருத்துவரே இல்லை. முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி உள்ளே நுழைந்தார்.
மருத்துவ உயர்படிப்புக்கு பாரீஸ் சென்றவருக்கு அந்தத் துறையோடு சமூக சேவையும் சீர்திருத்தமும் சேர்த்துப் பார்க்கும் சிந்தனை ஏற்பட்டது. இதில் மிக முக்கியமானது தேவதாசி முறை ஒழிப்பு. தேவரடியார், பதியிலார், வேசையர், தாசிகள்,கணிகையர், நர்த்தகி, நடன மங்கை எனப் பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்ட பரிதாபப் பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டார்கள். இந்தப் பெண்களுக்கு உடலில் திரிசூலம், ரிஷபகாளை, சங்கு, சக்கரம் போன்ற ஏதாவது ஒரு முத்திரை பதிக்கப்படும். கடவுள் சிலை முன் உட்கார்ந்து தாலியைக் கட்டிக் கொள்வார்கள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து இந்தப் பழக்கம் நாட்டில் இருந்தது. எட்டு, ஒன்பது வயதுப் பெண் குழந்தைகள் இப்படி பழக்கப்பட்டார்கள்.  சில இடங்களில் வேறு மாதிரியாகவும்  கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆடல், பாடல் கலையே மெல்ல, செல்வந்தர்களின் காம இச்சைகளைத் தீர்க்கும் பாலியல் தொழிலாக மாறிப்போனது. இது கோயில் நிர்வாக அமைப்பைச் சீரழித்தது. இந்தப் பெண்களை ஒரு கோயிலில் இருந்து இன்னொரு கோயிலுக்கு மாற்றுவது, நகைகளைத் திருடுவது, சிலர் இந்தப் பெண்களை தனியாகப் பிரித்துச் சென்று குடியேற்றுவது, பெண்கள் இதில் இருந்து தப்பித்து  ஓடுவது, ஓடிய பெண்ணை இழுத்து வந்து தண்டிப்பது, இந்தப் பெண்கள், வீட்டிலேயே பணியாளர்களாகக் கிடப்பது, அதனால் பணியாளர்களின் மனைவிகள் பிரச்னையைக் கிளப்புவது என்று பெண் குலமும், கோயிலும் ஒரே நேரத்தில் சிதைந்ததைப் பார்த்துத்தான் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர முத்துலட்சுமி முயன்றார். 1927-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் தீர்மானம் கொண்டு வந்தார்.
கோயில்களில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை 1886-ம் ஆண்டு முதலில் வெளியில் கொண்டு வந்தவர் ஜோசான் பட்லர். மதத்தில் தலையிட மாட்டோம் என்று விக்டோரியா வாக்குறுதி கொடுத்திருந்ததால் பிரிட்டிஷ் அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. மைனர் பெண்களை கோயில் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், வயது வந்த பெண்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பிரிட்டிஷ் அரசு சொன்னதே தவிர, தேவதாசி முறையை ஒழிக்க முன் வரவில்லை. முத்துலட்சுமி ரெட்டிதான் அதற்கு முயன்றார். அதனை அன்றைய தேசியவாதிகளில் சிலரே எதிர்த்தார்கள். அதில் முக்கியமானவர் சத்தியமூர்த்தி. இதை மதத்தின் மீதான தாக்குதலாக சத்தியமூர்த்தி பார்த்தார்; மதவிவகாரங்களில் தலையிடுவது கூடாது என்றார்; மதம் போய்விடும் என்றார்; தாசிகளை ஒழிப்பது  கலையை ஒழிப்பதற்குச் சமம் என்றார்.
தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது என்று சென்னை மாகாண சட்டமன்றத்திலேயே சிலர் பேசினார்கள். ‘‘உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?” என்று சட்டசபையில் தான் கேட்டதாகவும், அப்போது சட்டசபையே ஸ்தம்பித்து நின்றுவிட்டது என்றும் ஆண் சகோதரர்களும் தலைகுனிந்துவிட்டார்கள் என்றும் முத்துலட்சுமி எழுதி உள்ளார். இறுதியில் தேவதாசி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேறியது. ஆனால், அதைப் பொதுமக்கள் கருத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றுக்கு விடப்பட்டது. இது, ராஜாஜி முதல்வராக இருந்தபோது நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதனை சட்டசபையில் ராஜாஜி வைக்கவில்லை. ‘‘நம் நாட்டின் சுதந்திரத்துக்காக நிறைய தியாகங்களை ராஜகோபாலாச்சாரியார் செய்திருந்தாலும் சமூக சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை, முக்கியமாக பெண் விடுதலையைப் பொறுத்தவரை அவர் ஒரு பழைமைவாதி. மாற்றத்தை விரும்பாதவர்’’ என்று எழுதி இருக்கிறார் முத்துலட்சுமி. ஓமந்தூர் ராமசாமி  அமைச்சரவையில்தான் 1947-ம் ஆண்டு இந்தச் சட்டம் அமல் ஆனது.

‘‘பெண்கள் தங்களுக்கான கொடுமையை முறியடிக்க பெண்கள்தான் முயற்சிக்க வேண்டும். என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான்’’ என்றார் காந்தி. ‘‘ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’’ என்று கேட்டார் பெரியார்.
பெண்ணுக்கான விடுதலை என்பது பெண்களின் கையிலேயே இருக்கிறது. அதில்தான் பெண்ணின் பெருமை இருக்கிறது. ஆண் அமைச்சர்களுக்கு இணையாக பெண் அமைச்சர் கமிஷன் வாங்குகிறார். பட்டுச்சேலைகளைப் பணம் கொடுக்காமலேயே அள்ளிக்கொள்கிறார்கள். லத்திகள் உடைய உடைய பெண் போலீஸார் அடித்து நொறுக்குகிறார்கள்.  கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வேறுபாடு இல்லை என்றும், லாலுவுக்கும் மாயாவதிக்கும் மாறுபாடு இல்லை என்றும் பெயர் எடுப்பதா பெருமை? இல்லை,  மிகமிக வலிமையற்ற உடல்நிலையில்... தனது வாதத்திறமையால் அதிகார வர்க்கத்திடம் தான் நினைத்ததை எல்லாம் சாதித்த முத்துலட்சுமி அம்மையார்களால் பெருமை அடைகிறது பெண் இனம். எல்லோருமே தன்னிடம் காலில் விழ வேண்டும் நினைப்பவர்களால் அல்ல!

0 comments:

Post a Comment