Monday, July 29, 2019

உள்ளுறுப்புகளில் மிகப்பெரியதான கல்லீரல் நோய்த்தொற்றுக்கெதிராகச் செயல்படுவது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் ஹார்மோன்களையும் சுரப்பது, ரத்தம் உறைய உதவுவது எனப் பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்கிறது.

உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் மிகப்பொதுவாக ஏற்படும் பிரச்னை ஹெபடைட்டிஸ் (கல்லீரல் அழற்சி) வைரஸ் தொற்றுதான். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தத் தொற்று காணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஹெபடைட்டிஸ் நோய் அதிகரித்துவருவதால், அது ஒரு பொதுசுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி ஹெபடைட்டிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வைரஸைக் கண்டுபிடித்த அமெரிக்க மருத்துவரும் பேராசிரியருமான பேருச் பிளம்பெர்க் என்பவரின் பிறந்ததினம் ஹெபடைட்டிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினத்தையொட்டி ஹெபடைட்டிஸ் வைரஸ் பற்றி அறிந்துகொள்ள கல்லீரல் நிபுணர் விவேக்கை சந்தித்துப் பேசினோம்.
“ஹெபடைட்டிஸ் நோய் என்பது உலக அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஹெபடைட்டிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இந்த நோயால் ஆண்டுக்கு 1.24 கோடி பேர் உயிரிழக்கின்றனர். உலகளவில் 29 கோடி பேர் ஹெபடைட்டிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக சுகாதார நிறுவனம் களமிறங்கியுள்ளது. 2030-க்குள் இந்த நோயை ஒழிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
ஹெபடைட்டிஸ் தொற்றுக்கு காரணமாகஇருப்பது `ஹெபடைட்டிஸ்’ எனப்படும் வைரஸ். ஹெபடைட்டிஸில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகையான வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 'பி' மற்றும் 'சி' மிகவும் ஆபத்தானவை. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் ஆகியவை பரவும்முறை, தடுப்புமுறை மற்றும் சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். அதேபோன்று ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும்.
ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள் ஆகியவை அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவு வழியாகப் பரவக்கூடியது. மஞ்சள்காமாலை, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் இ வைரஸுக்கு தடுப்பூசி கிடையாது.
ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப்போடுவது, ஒரே ஊசியின் மூலம் பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவ வாய்ப்புள்ளது. இந்த இரு வைரஸ்கள் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அதை அகற்றவே முடியாது.
கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூலகாரணமாக ஹெபடைட்டிஸ் பி,சி வைரஸ்கள் இருக்கின்றன. இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் தாக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப்பரிசோதனை மூலமே கண்டறியமுடியும். இவ்விரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி கிடையாது.
ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் 'டி' வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 'டி' வைரஸின் பெருக்கத்துக்கு உதவுவதே பி வைரஸ்தான். நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள 5 சதவிகிதத்தினருக்கு டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்றாகும். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும். ரத்தப் பரிசோதனையின் வழியாக இதன் பாதிப்பைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இரண்டும் பாதித்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸையும் தடுக்கலாம்.
ஹெபடைட்டிஸ் வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படும்போது போலியோ, அம்மை நோய்களைப் போல ஹெபடைட்டிஸ் நோயையும் இவ்வுலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கலாம்”என்கிறார் மருத்துவர் விவேக்.

0 comments:

Post a Comment