Wednesday, December 12, 2018



தெற்கு அந்தமான் அருகே டிசம்பர் 9-ம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலிமையடைந்து புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது  
தெற்கு அந்தமான் - சுமத்திரா தீவு இடையே டிசம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. ஏற்கெனவே தற்போது நிலவி வரும் காற்றழுத்த சுழற்சியுடன் இணைந்து தெற்கு அந்தமான் அருகே வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது மாறும்.
இது, 15-ம் தேதி அல்லது 16-ம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி வரும். இது வலிமையடைந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. வட தமிழகத்தை நோக்கி வந்தால் சிறு புயலாக மட்டுமே இருக்கும். அதனால் பயப்பட வேண்டாம். தமிழகத்துக்கு அதிகமான மழை தரும் நிகழ்வாகவே இது அமைய வாய்ப்புள்ளது.
ஆனால் வலிமையடைந்து பெரும் புயலாக உருவானால் தெற்கு ஆந்திராவை நோக்கி சென்று விடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோரா மாவட்டங்களில் கனமழை, மிக கனமழையை கொடுக்கும். திருவள்ளூர் தொடங்கி புதுச்சேரி வரையிலான வட கடலோர பகுதியில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பரவலாக மழை பெய்யும்.
ஆந்திரா கடல்பகுதிக்கு சென்றால் வலிமையான புயலாக மாறும். இதனால் தெற்கு ஆந்திராவில் பலத்த காற்றையும், மழையையும் கொடுக்கும். ஆந்திராவுக்கு சென்றால் வட தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழையை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தமிழக கடல் பகுதியில் நிலவும் வெப்பத்தை பொறுத்து நிகழ்வுகள் அமையும். இன்னும் 9 நாட்கள் இருப்பதால் அதன் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தடுத்த நாட்களில் இதன் நகர்வுகள் முழுமையாக தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment