Tuesday, December 18, 2018

ஒரு ஆடு மேய்ப்பவர் எப்படி உலகின் மிகப் பெரிய டைனோசர்களின் கல்லறையை தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடித்தார்?
தனது இறந்துபோன குடும்பத்தினர் புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்கு செல்லும் வழக்கமான வழியில் ஒருநாள் செல்லும்போது எதேச்சையாக ஆடு மேய்ப்பவரான டுமங்வ் தைபெயேகா என்பவர் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் புதைபடிமங்களை தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கண்டறிந்தார்.
"என்னுடைய கொள்ளு தாத்தா-பாட்டிகள் இறந்ததும் இந்த இடத்தில்தான் புதைக்கப்பட்டனர். அவர்களுடைய கல்லறையையும், அது இருக்கும் இடத்தையும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை" என்று 54 வயதாகும் டுமங்வ் கூறுகிறார். தனது கண்டுபிடிப்பிற்கு பிறகு அவர் தனது ஊரில் ஹீரோ போல பார்க்கப்படுகிறார்.
"ஒருநாள் கல்லறைக்கு செல்லும்போது, ஒரு மிகப் பெரிய எலும்பை பார்த்தேன். அதற்கு முன்புவரை நான் அவ்வளவு பெரிய எலும்பை பார்த்ததில்லை. எனவே, அதை வேறு யாராவது ஒருவரிடம் காண்பிப்பதுதான் சரியானது என்று முடிவு செய்தேன்."
எங்களது ஊரில் டைனோசர்களின் மீது அதிக பிரியம் கொண்டவராக கருதப்படும் ஓய்வுப்பெற்ற ஜேம்ஸ் ரலேன் என்பவரிடம் அதை காண்பித்தேன்.

'எங்களது கிராமத்தை பற்றி புத்தகங்கள் எழுதப்படும்"

"எங்களது சிறுவயதிலிருந்தே டைனோசர்கள் என்பவை வெறும் கட்டுக்கதை என்று சொல்லி வளர்க்கப்பட்டோம்" என்று அவர் கூறுகிறார்.
"1982ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை படிக்கும் வரை நான் டைனோசர்கள் என்பவை வெறும் கட்டுக்கதை என்ற முன்னோர்களின் கூற்றையே நம்பி வந்தேன். அந்த புத்தகத்தை படித்த பின்பு டைனோசர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடங்கினேன்."
"அப்படிப்பட்ட நான் எனது வீட்டுக்கு அருகே டைனோசர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் மிகப் பெரிய ஆதாரத்தை கண்டறிந்தது எனக்கு எவ்வளவு உற்சாகத்தை அளித்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்."
டைனோசர்களின் கல்லறையை ஆடு மேய்ப்பவர் கண்டறிந்தது எப்படி?
"இந்த கண்டுபிடிப்பின் மூலம் எங்களைப் பற்றியும், எங்களது மிகச் சிறிய கிராமம் குறித்தும் உலகம் முழுவதும் தெரியவருவது மட்டுமல்லாமல், இதுகுறித்து புத்தகங்களும் எழுதப்படும்."
"எங்களது கிராமம் வளர்ச்சி அடைவதற்கு அது வழிவகுக்கும்" என்று தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அவர் விளக்கினார்.
டைனோசர்களின் புதைகுழியை கண்டறிந்து உலகிற்கு சொல்லியவர்களில் மூன்றாவது மற்றும் கடைசி நபர், அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஆரம்ப பள்ளியின் புவியியல் ஆசிரியரான தெம்பா ஜிகாஜிக்க என்பவராவார்.
"அவர்கள் இருவரும் மிகப் பெரிய எலும்புத்துண்டுகளை என்னிடம் கொண்டு வந்தபோது, அது புதைபடிமமாக இருக்க வேண்டுமென்று நான் சந்தேகித்தேன்" என்று அவர் கூறுகிறார்.
"நான் முதல் முறையாக அந்த எலும்புகளை பார்த்தபோது, உடனடியாக அது பல்லாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஏதாவது விலங்கின் பாகமாகத்தான் இருக்கும் என்று சந்தேகித்த பின்பு, விட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் உறுதி செய்தனர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

'ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டோம்'

தென்னாப்பிரிக்காவின் விட்ஸ் பல்கலைக்கழகம், பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு, பர்மிங்காம் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த பகுதிக்கு வந்து பல வாரங்களுக்கு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
டைனோசர்களின் கல்லறையை ஆடு மேய்ப்பவர் கண்டறிந்தது எப்படி?
இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்த விட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோனா சோனியர், "நாங்கள் முதல் முறையாக அந்த இடத்திற்கு சென்றபோது ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டோம். எங்கு பார்த்தாலும் டைனோசர்களின் படிமங்கள் இருந்தன" என்று அவர் கூறுகிறார்.
"எங்களது முதல் கட்ட பணியில் மொத்தமுள்ள புதைப்படிமத்தில் வெறும் ஐந்து அல்லது பத்து சதவீதத்தைதான் கண்டறிந்திருப்போம்" என்று நினைக்கிறேன்.
"நாங்கள் மறுபடியும் அடுத்த வருடம் அந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள டைனோசர்களின் படிமங்களை ஜோஹனஸ்பெர்க் நகரத்திற்கு கொண்டுவந்து ஆய்வு செய்யலாம் என்று முடிவுசெய்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

தாவரங்களை உண்டு வாழும் டைனோசர்கள்

தரிசு நிலத்தை போன்று காணப்படும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிந்திருக்கும் அந்த பகுதியில் குறைந்தது 12 வேறுபட்ட தாவரங்களை உண்டு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கணக்கான புதைப்படிமங்கள் நிறைந்திருக்கும் என்று கருதுகிறோம்.
உள்ளூர் மக்களுடன் அந்த பகுதியை சுற்றிப்பார்த்தபோது, சுமார் 26 அடி உயரமும், ஒரு டன் எடையும் கொண்ட மிகப் பெரிய எலும்பொன்றை பார்த்தோம்.
சுமார் 145 முதல் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஜுராசிக் சகாப்தத்தில் வாழ்ந்த மிகப் பெரிய உடலையும், நீண்ட கழுத்தையும் கொண்ட ஒருவகை டைனோசராக இருக்கலாம் என்று நம்புகிறோம்.
டைனோசர்களின் கல்லறையை ஆடு மேய்ப்பவர் கண்டறிந்தது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தற்போது கிடைத்துள்ள இந்த அரிதான படிமங்களை கொண்டு டைனோசர்கள் குறித்த புதிய விடயங்களை தெரிந்துகொள்வதுடன், இந்த குறிப்பிட்ட இடத்தில் ஏன் இத்தனை டைனோசர்கள் உயிரிழந்துள்ளன என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் கிடைத்துள்ள படிமங்களை கொண்டு ஆராய்ச்சிகளை செய்து, டைனோசர்களின் வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்தில், விரிவாக அறிவதற்கு பல ஆண்டுகளாகும் என்றாலும், இப்போதே அந்த பகுதி மக்களும், இளம் ஆய்வாளர்களும் பெருமையுடனும், உற்சாகமுடனும் காணப்படுகிறார்கள்.
டைனோசர்களின் புதைப்படிமங்களை பார்ப்பதற்காக இந்த கிராமத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இனிவரும் காலங்களில் வருவார்கள் என்பதால் தங்களது கிராமத்தை உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுகிறார்கள்.

0 comments:

Post a Comment