அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது.
""ஐயா! என் கோழி இவள் வீட்டுக்கு அடிக்கடி போய்விடும். நான் வயல்வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கும்போது என் கோழியைக் காணவில்லை. கேட்டால் தெரியாதென்கிறாள். அந்தக் கோழி வாங்கின கடனே இன்னும் அடையவில்லை! அதற்குள் நஷ்டப்படும்படி ஆகிவிட்டது. நீங்கதான் நல்லபடி தீர்ப்பு சொல்ல வேண்டும்!'' என்று முறையிட்டாள் ஒருத்தி.
""இதற்கு உன் பதிலென்ன?'' என்று மற்றவளைக் கேட்டார் நீதிபதி.
""ஐயா! இவள் கோழி என் வீட்டுக்குள் வந்து அடிக்கடி என் கோழிக்கு வைத்திருக்கும் தீவனத்தைத் தின்னும். நானும் விரட்டி இருக்கிறேன். இன்றைக்கு அது வரவில்லை. அதைக் காணவில்லை என்றால் அதற்கு நானா பொறுப்பு!'' என்று கோபமாக பதில் சொன்னாள் அவள்.
""சரி. நீங்கள் போகலாம். அம்மணி! சாட்சி இல்லாமல் குற்றம் நிரூபணமாகாது!'' என்று சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார் நீதிபதி.
கோழித்திருடி திமிராக நடந்துபோனாள். குற்றவாளி அவள்தான் என்று நீதிபதிக்குத் தெரிந்தது. ஆனால், அதை வைத்துத் தீர்ப்பு சொல்ல முடியாதே!
வழியில் ஒரு திண்ணையில் நான்கு பேர் சொக்கட்டான் ஆடிக்கொண்டிந்தனர்.
""இன்றைக்கு மன்றத்தில் கோழியைத் திருடவில்லை என்று சாத்தித்துவிட்டு திமிராக நடக்கிறாள் பார்! அவள் தலையில் ஒட்டியிருக்கும் கோழி இறகை நீதிபதி பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?'' என்றான் ஒருவன் மெல்லிய குரலில்.
கோழி திருடிக்குப் பக்கென்றாகிவிட்டது. மெதுவாகப் பின் தலையைத் தடவுவது போல் தட்டிவிட்டாள். சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த காவலர்களில் இருவர் ஓடிவந்து அவளைப் பிடித்தனர்.
நீதிபதி தலைப்பாகையை எடுத்துவிட்டு அவள் முன் வந்தார். அவள் வெலவெலத்துப் போய் குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.
கோழிக்கான தொகையை அபராதத்தோடு கோழியைப் பறிகொடுத்தவளிடம் கொடுத்து மன்னிக்கும்படி வேண்டினாள்.
பொய்யும் திருட்டும் முடிவில் அவமானத்தையே தரும்.
0 comments:
Post a Comment