Thursday, December 13, 2018

நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தது அரசியலமைப்புக்கு முரண் - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதாக நவம்பர் 09ம் தேதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த அறிவித்தலை எதிர்த்து நவம்பர் 12ஆம் தேதி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்கள் தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு நவம்பர் 13 ஆம் தேதியன்று இடைக்காலத் தடையினை விதித்தது.
மேற்படி வழக்கினை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான புவனகே அலுத்விகார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ ஆகியோரைக் கொண்ட குழு விசாரித்து வந்த நிலையில், இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாலரை வருடத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்ப்பில் தெரிவித்த பிரதம நீதியரசர், அவ்வாறு ஜனாதிபதி முன்கூட்டி கலைப்பதாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment