Thursday, December 20, 2018


செவ்வாய்க்கிழமையன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில், அடிப்படை ஏலத் தொகையான 20 லட்சம் ரூபாயில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
27 வயதான வருண் சக்கரவர்த்தி டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் முன்பு ஈர்த்திருந்தார்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணியின் சார்பாக விளையாடிய வருண் 22 விக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் விதமாக தனது சுழல் பந்துவீச்சில் 7 விதமான மாற்றங்களுடன் பந்துவீசுவார் வருண்.சென்னையை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இந்த முறை (2018) கோப்பையை வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடினார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தேர்வு குறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக தொகையில் ஏலம் எடுக்கப்பட்டது மற்றும் இதனால் கிடைக்கும் பெரும் கவனம் ஆகியவற்றைவிட ஓர் ஐபிஎல் அணிக்காக தேர்வாகியுள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.
தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து ஓர் அணி தன்னை ஏலம் எடுத்தது பெருமையை தருவதாக அவர் கூறினார்.
'பெரிதும் உதவினார் அஸ்வின்'
ஐபிஎல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது , வருங்காலத்தில் இந்திய அணிக்கு தேர்வாக படிக்கல்லாக அமையுமா என்று கேட்டதற்கு, ''நிச்சயமாக எனது கனவு அதுதான். அதற்கு ஏற்ப எனது பங்களிப்பும் வரும் போட்டிகளில் அமைய வேண்டும்'' என்று வருண் கூறினார்.
ஐபிஎல் தொடரில் அவருக்கு அச்சுறுத்தலாக எந்த பேட்ஸ்மேனை கருதுகிறார் என்று கேட்டதற்கு, ''அப்படி குறிப்பாக நான் யாரையும் எண்ணவில்லை. நல்ல பேட்ஸ்மேன்கள் யாரும் பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல்தான். அதே வேளையில் அவர்களை வீழ்த்த நானும் சிறப்பாக பந்துவீச முயற்சிப்பேன்'' என்று வருண் குறிப்பிட்டார்.
பள்ளி காலத்தில் விக்கெட்கீப்பராக வருண் சக்ரவர்த்தி செயல்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சுழல் பந்துவீச்சில் சிறப்பாக பங்களித்து வருகிறார். இது குறித்து வருண், ''பள்ளிக்காலத்தில் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக நான் இருந்தேன். பள்ளி பருவத்துக்கு பிறகு ஏறக்குறைய 7 ஆண்டுகள் நான் பெரிதாக கிரிக்கெட் விளையாடவில்லை'' என்று நினைவுகூர்ந்தார்.
படத்தின் காப்புரிமைTNPL
''படிப்புக்கு முக்கியத்துவம் அளித்த காரணத்தால் நீண்ட காலம் இடைவெளி ஏற்பட்டது. பிறகு எனக்கு சுழல் பந்துவீச்சீன் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனும், சக தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னை மிகவும் ஊக்குவித்தாகவும், பந்துவீச்சு நுணுக்கங்களை மேம்படுத்த உதவியதாகவும் வருண் குறிப்பிட்டார்.
' எளிதில் கணிக்க முடியாத பந்துவீச்சு'
வருண் சக்ரவர்த்தியின் தேர்வு குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி கடந்த ஆண்டு சென்னையில் நடந்த வலை பயிற்சியில் வருண் சக்ரவர்த்தி பந்து வீசியதை பார்த்து இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. தேர்வாளர்கள் அவரை கவனிக்க வேண்டும். இன்னொரு புதிரான ஒரு சுழல் பந்து வீச்சாளர் வருண்' என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் காப்புரிமைTWITTER
அதிக தொகையில் வருண் எடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கிரிக்கெட் வீரர் ரகுராமன் பிபிசி தமிழிடம் உரையாடினார்.
''டிஎன்பிஎல் மற்றும் தமிழ்நாடு அணிக்கு விளையாடிய காலம் முதல் வருணை கவனித்துள்ளேன். பலரையும் அசரடிக்கும் விதமாக பந்துவீசுவது அவற்றின் பாணி. அவரின் பந்துவீச்சு நுணுக்கங்களை பேட்ஸ்மேன்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது'' என்று நினைவுகூர்ந்தார்.
''தமிழக அணி சிறப்பாக விளையாட போதும் விஜய் ஹசாரே தொடரில் வருண் மிக சிறப்பாக விளையாடினார். அப்போதே அவர் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பந்துவீச்சு மட்டுமல்ல ஆட்டத்தின் ஓவ்வொரு அம்சத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிபடுத்த வேண்டும் என்று திடமான எண்ணம் வருணுக்கு உண்டு'' என்று தெரிவித்தார்.
'இந்திய அணியில் அவர் விரைவில் இடம்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கலாம். சக்லைன் முஷ்டாக் மற்றும் முரளிதரன் போன்று யாராலும் எளிதாக கணிக்க முடியாத பந்துவீச்சு திறன் கொண்ட வருண் உலக அரங்கில் முன்னணிக்கு வர நல்ல வாய்ப்புண்டு'' என்று ரகுராமன் மேலும் கூறினார்.
வருண் சக்கரவர்த்தியின் தனித்துவ அம்சங்கள் குறித்து தமிழக மற்றும் இந்திய வீரரான விஜய்சங்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கணிக்க முடியாத பந்துவீச்சு நுணுக்கம் மற்றும் எப்போதும் அணிக்காக பங்களிக்க தயாராக இருக்கும் மனப்பாங்கு ஆகியவையே வருணின் பிளஸ் பாயிண்ட் எனலாம்'' என்று குறிப்பிட்டார்.
படத்தின் காப்புரிமைசங்கர்
Image caption
''கேப்டன் எப்போதும் கூறினாலும் உடனடியாக அணிக்காக ஆர்வமாக பந்துவீசுவார் வருண். மேலும் ஆட்டத்தின் போக்கு குறித்து எப்போதும் கணித்து விளையாடுவது வருணின் தனித்துவ அம்சம்'' என்று விஜய்சங்கர் கூறினார்.
''எந்த சுழல் பந்துவீச்சாளரையும் அவரோடு ஒப்பிட முடியாது. வருணின் பாணி மற்றும் 7 விதமாக பந்துவீசும் திறமை ஆகியவை தனித்து நிற்கும்'' என்று அவர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment