Tuesday, December 11, 2018


சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார்என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

0 comments:

Post a Comment