மணி ரெண்டாகி விட்டதை கடிகாரம் சொல்லி ஓய்ந்தது. அகிலா மிகவும் களைத்துப்போய் இதயம் கனத்துப்போய் அமர்ந்திருந்தாள். அவள் கணவன் சேகர் இன்னும் வீடு வந்து சேரவில்லை. இரண்டு மாத காலமாகவே இப்படித்தான் நடந்து கொள்கிறான். மாமியார், மாமனாருடன் ஒன்றாக இருந்தபோது இப்படி நடந்து கொண்டதேயில்லை. இரவு பத்து மணிக்குமேல் வெளியில் சென்றதுமில்லை, தங்கியதுமில்லை.
கூட்டுக்குடித்தனம் சரிப்பட்டு வரவில்லை அகிலாவுக்கு. எதுக்கெடுத்தாலும் மாமியார், மாமனாரைக்கேட்டு செய்வது பிடிக்கவில்லை. தனியாகப் பேச முடியவில்லை. ஒரு சினிமாவுக்குப் போக முடியவில்லை. இப்படி ஏகப்பட்ட ""இல்லை'' கூட்டுக்குடித்தனத்தில். கணவனிடம் வற்புறுத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து தனியே குடிவந்த மகிழ்ச்சி கொஞ்ச நாட்கள்கூட நிலைக்கவில்லை.
ஒன்றாக இருந்தபோது ஒழுங்காக இருந்த சேகர், வீட்டுக்குத் தாமதமாக வருவதைக்கூட பொறுத்துக் கொண்ட அகிலாவால் கணவன் குடிக்கவும் ஆரம்பிக்க வெறுத்துப் போனாள். முதலில், ""குடிக்கவில்லை. பாக்குதான் போட்டிருக்கிறேன்'' என்றவன் பிறகு ஒத்துக் கொண்டான்.
""அப்படித்தான் செய்வேன்'' என்று கூற அதிர்ந்து போனாள். நாளாக நாளாக இரவு வீட்டுக்கு வரும் நேரம் மாறிக் கொண்டேயிருந்தது. அரிசியில்லை, பருப்பு இல்லை என்று சொல்லவே பயந்தாள். ""நான் எங்கே போறது? சும்மா தொந்தரவு பண்ணினே, நான்எங்கேயாவது போயிடுவேன்'' என்று மிரட்டலாய் கூறினான்.
சந்தர்ப்பம் இப்படி இருக்க, ஒரு வயசு குழந்தைக்கும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று வர ரொம்பவும் வெறுத்துப் போனாள். அம்மா வீட்டுக்குப் போகலாம் என்றால், அம்மாக்காரி கடுமையாகத் திட்டினாள்.
""எங்க பேச்சை மீறி, தனிக்குடித்தனம் போனில்ல.. அனுபவி. உனக்கு கீழே ஒருத்தி இருக்கா.. இங்க வந்தீன்னா அவ வாழ்க்கையும் பாழாய் போகும். அதனால இங்க வர்ற வேலை மட்டும் வைச்சுக்காதே!'' என்றாள். தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது அகிலாவுக்கு இப்போதுதான் உறைத்தது.
பொழுதும் விடிந்தது. சேகர் இன்னும் வரவில்லை. ஒரு கடிதம் எழுதி கணவன் பார்க்கும் இடத்தில் வைத்துவிட்டு, ஒரு முடிவோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.
தாமதமாக வீடு வந்த சேகர், வழக்கத்துக்கு மாறாக வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான். வழக்கமாக சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவி எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றவன், கண்ணாடிக்கு அருகில் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்தான். மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
அகிலாவுக்கு கூட்டுக்குடித்தனத்தின் அருமையை உணர்த்துவதற்காக குடிகாரனாக போட்ட வேசத்துக்கு நல்ல பலன் கிடைத்ததில் மகிழ்ந்து போனவன் வீட்டைக் காலி செய்ய டெம்போவுக்கு சொல்லக் கிளம்பினான். மறக்காமல் மாமியாருக்கும் நன்றி சொல்லி போன் செய்தான்.
0 comments:
Post a Comment