புதுச்சேரி மாநிலத்தில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 26 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருகட்டமாக பழைய துறைமுக பாலத்திலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் 26.2 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகத்தை சுற்றுலாத்துறையின் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுக்குறித்து புதுச்சேரி மீன் வளத்துறை இயக்குநர் முனுசாமி கூறுகையில், இந்தியக் கப்பற்படையால் பயனற்று விடப்பட்ட `ஐ.என்.எஸ் கடலூர்' என்ற கப்பலின் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் முழுமையாக நீக்கிவிட்டு கடலுக்கு நிறுவப்பட இருக்கிறது.
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் நிறுவப்பட இருக்கும் இந்தக் கப்பல் 61.3 மீட்டர் நீளமும், 10.2 மீட்டர் அகலமும், 11.98 மீட்டர் உயரமும் உடையது. இதன்மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கும் பகுதியில் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் ஏற்படுவதோடு மீன் பெருக்கமும், மீன் பிடிப்பும் அதிகரிக்கும்.கடலுக்குள் இருக்கும் கப்பலைக் காண கடலுக்குள் செல்லும்போது டால்பின், திமிங்கிலம் மற்றும் கடல் சார்ந்த பறவைகளைக் கண்டுகளிக்கலாம். அத்துடன் ஆழ்கடல் நீச்சலும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த நீரடி அருங்காட்சியகத்தைக் காண புதுச்சேரிக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இவ்வாறு புதுச்சேரி மீன் வளத்துறை இயக்குநர் முனுசாமி தெரிவித்தார்
0 comments:
Post a Comment