இந்திய பேட்ஸ்மேன்களில் யாருடைய ஷாட் மோசமாக இருந்தது' என்று கருத்துக்கணிப்பே நடத்தும் அளவுக்கு விளையாடினார்கள். ஸ்டார்க் பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா போல்டாகும்போதுதான், `மோசமான ஷாட்டால் அவுட்' என்ற கமென்டரி மாறியது. அதுவரை அவுட்டான 6 வீரர்களுமே கேட்ச்.
ஒரு தொடரின் முதல் போட்டிதான், அடுத்தடுத்த போட்டிகளின் டெம்போவை அதிகரிக்கும். ஒரு டெஸ்ட் போட்டியின், முதல் நாள்தான் அந்தப் போட்டியின் முடிவை பெரும்பாலும் முடிவு செய்யும். அந்த முதல் நாளின் முதல் செஷன்... அடுத்த 60 ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த முதல் போட்டியின், முதல் செஷன்... அந்தத் தொடரின் மிகமுக்கியமான பகுதி. முதல் உணவு இடைவேளையின்போது, எந்த அணி மிகவும் சந்தோஷமாக பெவிலியன் திரும்புகிறதோ, அவர்களின் ஆட்டம் அடுத்தடுத்த செஷன்களில், நாள்களில், போட்டிகளில் மெருகேறிக்கொண்டே இருக்கும். முதல் செஷன் அவ்வளவு முக்கியமானது! #AUSvIND
உள்ளூர் அணியுடன் விளையாடும்போது, சுற்றுப்பயணம் செய்த அணிகள், பெரும்பாலும் தற்காப்பு ஆட்டமே ஆடும், ஆடவேண்டும். அதுவும் பேட்டிங் செய்யும்போது, எவ்வளவு பொறுமையாக ஆடுவேண்டுமோ அவ்வளவு பொறுமையாக ஆடவேண்டும். இந்திய அணி, அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் செஷனை மிகப் பொறுமையாகக் கையாண்டிருக்கவேண்டும். ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சுக் கூட்டணிக்குக் கொஞ்சம் மதிப்பளித்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் அதைச் செய்யவில்லை. உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மாபெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பரிசளித்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள். முதல் செஷனில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள்!6 பந்துகளையும், துல்லியமாக யார்க்கர் வீசக்கூடிய ஸ்டார்க், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் பெரும்பாலும் பந்துவீசுகிறார். பௌன்ஸர்களால் மிரட்டும் கம்மின்ஸும் ஆஃப் ஸ்டம்ப் லைனைத்தான் குறிவைக்கிறார். ஹேசில்வுட்... அவரும் அவ்வழியே! தொடக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய பௌலர்கள் குறிவைத்தது `அவுட் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப்' லைன்தான். இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை உணர்ந்து, அதற்கேற்பச் சிறப்பாக ஸ்கெட்ச் போட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் அதற்கேற்பவே விளையாடினர்.
இந்திய பேட்ஸ்மேன்களில் யாருடைய ஷாட் மோசமாக இருந்தது' என்று கருத்துக்கணிப்பே நடத்தும் அளவுக்கு விளையாடினார்கள். ஸ்டார்க் பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா போல்டாகும்போதுதான், `மோசமான ஷாட்டால் அவுட்' என்ற கமென்டரி மாறியது. அதுவரை அவுட்டான 6 வீரர்களுமே கேட்ச். அந்தக் கருத்துக்கணிப்பில் முதலிடம் பிடித்தது என்னவோ சுழலில் அவுட்டான ரோஹித் ஷர்மா. புஜாராவோடு சேர்ந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டிருந்தார். லயான் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்தையும் தூக்கி அடித்து வெளியேறினார். அந்த இடத்தில் அப்படியொரு ஷாட் ஆடவேண்டிய அவசியமே இல்லை. அதுவும் ஒரே இடத்தில். முந்தைய பந்தே, ஃபீல்டர் பௌண்டரியை மிதித்ததால்தான் சிக்ஸரானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை அவசியம் ரோஹித்!கே.எல்.ராகுல், முரளி விஜய், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே... எல்லோரும் வேகப்பந்துவீச்சில், டிரைவ் செய்ய நினைத்து, ஸ்டம்புக்குப் பின்னே - விக்கெட் கீப்பர், ஸ்லிப், கல்லி... இவர்களில் ஒருவரிடம் கேட்சாகி வெளியேறினர். ராகுல், ஒரு வருடம் முன்பு இருந்ததுக்கு நேர் எதிர் துருவத்தில், அநியாய அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கிறார். ஒரு ஆஸ்திரேலிய தொடரில், அதுவும் முதல் போட்டியின் முதல் செஷனில், எவ்வளவு பொறுப்பாக ஆடவேண்டும்? மிகமோசமான ஷாட் செலக்ஷன். விஜய் - அவருக்கு ஈடுகொடுக்கிறார். பிரித்விக்கு இன்னொரு புதிய பார்ட்னர் தேடவேண்டும்போல..!கோலி - மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்திய கேப்டன், ஆறாவது ஸ்டம்ப் லைனில் போன பந்தை டிரைவ் செய்ய, கல்லியில் கவாஜா பிடித்த சூப்பர் மேன் கேட்சால் வெளியேறினார். இங்கிலாந்து தொடரில், இதுபோன்ற பந்துகளை ஆடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவரிடம், இப்போது அந்தத் தெளிவு இல்லை. ஏனெனில், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பெரிதாக ஸ்விங் ஆகாது. அதனால், தன் ஆஸ்தான கவர் டிரைவை ஆடிவிட்டார். ஆடுகளத்தைக் கணித்த இந்திய கேப்டன், ஆஸ்திரேலிய பௌலர்கள் பற்றி யோசிக்க மறந்தது ஏன்? ரஹானே - வெளிநாட்டு மண்ணில், இந்திய துணைக் கேப்டனின் சறுக்கல் தொடர்கிறது. இப்படி இவர்கள் ஏமாற்ற, உணவு இடைவேளையில் பரிதாப நிலையில் இருந்தது இந்திய அணி.இந்தத் தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாள்கள் முன்பு, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் ஒரு விஷயம் கூறியிருந்தார் : ``இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாகிங் கிரிக்கெட் ஆடவேண்டும். ஆனால், அது பேட்டால் அட்டாக் செய்வது இல்லை. மனதளவில் அட்டாகிங் கிரிக்கெட் ஆடவேண்டும். கிரீஸுக்குள் அவர்கள் எவ்வளவு தீர்க்கமாக, நம்பிக்கையாக, சுலபமாக ஆடுகிறார்கள் என்பதை பௌலருக்கு உணர்த்த வேண்டும். பௌலரின் மனத்திடத்தை அட்டாக் செய்யவேண்டும். பந்தை அல்ல". டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான்கள் எப்போதும் சொல்வது இதுதான். ஆனால், இந்த இந்திய அணிக்கு அது புரியுமா தெரியவில்லை.
ராகுல் - இங்கிலாந்தில் நடந்த கடைசி டெஸ்ட் போலவே அதிரடியாக ஆட நினைத்தார். கோலி - பௌலர்ளை அட்டாக் செய்ய நினைத்தார். ரோஹித், ரிசப் பன்ட் - அவர்கள் ஆடியது அக்மார்க் `லிமிடட் ஓவர்ஸ்' கிரிக்கெட். பின்பு எப்படி நிலைத்து நிற்க முடியும்? எல்லா பேட்ஸ்மேன்களும் இயான் சேப்பல் சொன்ன விஷயத்துக்கு எதிராகவே விளையாடினார்கள். ஒருவர் தவிர. சடேஷ்வர் புஜாரா - தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடி, மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் கைவிட்டிருந்த இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ஓரளவு கரைசேர்த்துள்ளார்.ஆஸ்திரேலிய பௌலர்கள் வீசிய வலையிலிருந்து தப்பித்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் இவர்தான். கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ் என எந்த டிரைவ் ஷாட் ஆடுவதையும் பெரும்பாலும் தவிர்த்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை ஆடாமல் பொறுமைகாத்தார். ஸ்டம்ப்பை, உடலை குறிவைக்கும் பந்துகளில் மட்டும் ரன்சேர்த்தார். அதிலும் பெரும்பாலும் லெக் சைடிலும், ஸ்டம்புகளுக்குப் பின்னாலும்தான். எப்படி ஆடவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார். நடுவில், 29 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. வாட்டிய அடிலெய்ட் வெயிலில், ஆஸ்திரேலிய பௌலர்களின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. மிட்சல் மார்ஷ் இல்லாததால், ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளரும் நீண்ட ஸ்பெல் வீசவேண்டியிருந்தது. புஜாராவின் விக்கெட் விழ நேரம் ஆக ஆக... ஆஸ்திரேலிய பௌலர்கள் பிடியை இழந்துகொண்டிருந்தனர்.
ரோஹித், பன்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய மிடில் ஆர்டரைப் பதம் பார்த்த நாதன் லயானை மிகவும் கவனமாக எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங்கில் பட்டையைக் கிளப்பியதால், ஸ்ட்ரோக் கூட மிகக் கவனமாக வைத்தார். ரோஹித், அஷ்வின் இருவருடனும் சிறு பார்ட்னர்ஷிப் அமைத்து, ஒருவழியாக இந்தியாவை கௌரவமான ஸ்கோரை எட்டச் செய்தார். இந்தியா 200 ரன்களை நோக்கிப் பயணித்தது. எதிர்பாராத நேரத்தில் அஷ்வின் வெளியேற, இயான் சேப்பல் சொன்னதுபோல் ஆடத் தொடங்கினார் புஜாரா.
அஷ்வின் அவுட்டானபோது 192 பந்துகளில் 72 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் : 37.5) அடித்திருந்தார் புஜாரா. அடுத்த ஓவரில், தன் ஆட்டத்தை மாற்றினார். அதுவரை லயான் பந்துவீச்சில், பேக்ஃபூட் வைத்து ஆடியவர், கிரீஸிலிருந்து வெளியே வந்து ஆடத் தொடங்கினார். அதற்காக ஸ்லாக் ஷாட் எல்லாம் ஆடவில்லை. ஸ்ட்ரோக் செய்வதையே கிரீஸுக்கு வெளியே வந்து செய்தார். புஜாரா, கிரீஸுக்கு முன் நகர நகர, லயானின் திட்டங்கள் மாறத் தொடங்கியது. பெர்ஃபெக்ஷன் குறைந்தது. புஜாரா அட்டாகிங் கிரிக்கெட் விளையாடினார்..!
மறுமுனையில் இஷாந்த் ஷர்மா இருந்ததால், பெரும்பாலும் அவரே ஸ்ட்ரைக் வைத்திருக்கவேண்டும். ஸ்ட்ரோக் செய்துகொண்டுமட்டுமே இருக்க முடியாது. அதிகமாக டபுள்கள் ஓடினார். ஐந்தாவது அல்லது ஆறாவது பந்துகளில் சிங்கிள் எடுத்துக்கொண்டார். இப்படியாக, ஆட்டத்தை மெதுவாக ஆஸ்திரேலியாவின் பிடியிலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார். 80 ஓவர்கள் முடிந்ததும் புதிய பந்தை எடுத்தது ஆஸ்திரேலியா. இஷாந்த் அவுட்டானதும், இன்னும் கியர்களை மாற்றினார். ஹேசில்வுட் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர், பௌண்டரி. ஸ்டார்க் ஓவரில் பௌண்டரி, அடுத்து சிக்ஸர் என மாறி மாறி விளாசினார். கடைசி 46 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, இந்தியாவை 250 ரன்களை எட்டச் செய்தார்.
அவ்வளவு அழகான ஆட்டம், தன் வழக்கமான ரன் அவுட் பாணியில் முடிந்தது. ஆனால், 80-களில் இருந்தபோதே அவர் மிகவும் சோர்வாக இருந்தார். தசைநார் கொஞ்சம் வாட்டியது. இருந்தாலும், அந்தப் பந்தில் சிங்கிளைத் தவிர்த்திருந்திருக்கலாம். ஏனெனில், அந்த அற்புதமான இன்னிங்ஸ், நாளை மகத்தான இன்னிங்ஸாக மாறியிருக்கக்கூடும். புஜாராவின் இந்த ஆட்டம், மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் தவற்றை உணர வழிவகுக்கும். ஒருவழியாக மிகமோசமாக முதல் நாளைத் தொடங்கிய இந்திய அணி 250/9 என முடித்துள்ளது. நாளை இந்திய பௌலர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இதேபோன்ற ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டும்.
0 comments:
Post a Comment