எது கெடும்
———————
பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்
ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்
கண்டிக்காத பிள்ளை கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
பிரிவால் இன்பம் கெடும்
பணத்தால் அமைதி கெடும்
சினமிகுந்தால் அறமும் கெடும்
சிந்திக்காத செயலும் கெடும்
சோம்பினால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
மோகித்தால் முறைமை கெடும்
முறையற்ற உறவும் கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்
உழுவாத நிலமும் கெடும்
உழைக்காத உடலும் கெடும்
இறைக்காத கிணறும் கெடும்
இயற்கையழிக்கும் நாடும் கெடும்
இல்லாலில்லா வம்சம் கெடும்
இரக்கமில்லா மனிதம் கெடும்
தோகையினால் துறவு கெடும்
துணையில்லா வாழ்வு கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
அளவில்லா ஆசை கெடும்
அச்சப்படும் கோழை கெடும்
இலக்கில்லா பயணம் கெடும்
இச்சையினால் உள்ளம் கெடும்
உண்மையில்லா காதல் கெடும்
உணர்வில்லாத இனமும் கெடும்
செல்வம்போனால் சிறப்பு கெடும்
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்
தூண்டாத திரியும் கெடும்
தூற்றிப்பேசும் உரையும் கெடும்
காய்க்காத மரமும் கெடும்
காடழிந்தால் மழையும் கெடும்
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்
வசிக்காத வீடும் கெடும்
வறுமைவந்தால் எல்லாம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
பொய்யான அழகும் கெடும்
பொய்யுரைத்தால் புகழும் கெடும்
துடிப்பில்லா இளமை கெடும்
துவண்டிட்டால் வெற்றி கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
கவனமில்லா செயலும் கெடும்
கருத்தில்லா எழுத்தும் கெடும்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.