Thursday, October 4, 2018

“திருப்பூர் குமரனின்”

 பிறந்த தினம் இன்று!


இந்திய விடுதலைப் போராட்ட தியாகி “திருப்பூர் குமரன்” 4-ம் அக்டோபர் 1904-ல் ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப் பாளையம் எனும் சிற்றூரில் நெசவாளரான நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியரின் மகனாக (குமாரசாமி இயற்பெயர்) குமரன் பிறந்தார் இவர்.
28 வயதில், தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்த, குமாரசாமி என்றழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் அவர்களின் 114 வது பிறந்த தினமின்று! 4 அக்டோபர் 1904
இவரது குடும்பம் நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், அங்கிருந்து திருப்பூருக்கு இடம் மாறியது.
ஆண்டுகள் வேகமாக உருண்டன…பதினெட்டு வயது நிரம்பியிருந்த குமரன், தந்தைக்கு உதவியாக அவர் நெய்த துணிகளை தலையில் வைத்துக் கொண்டு திருப்பூர் வரை சென்று கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்தார். தானே சுயமாக தறிநெய்தும் குடும்பம் நடத்த முடியாமல் போகவே, கணக்கெழுதும் வேலை தேடி திருப்பூருக்கே குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார் பதினெட்டே வயதான குமரன்.
அடுத்த ஆண்டே குமரனுக்கு மனைவியாகவும், தாய் கருப்பாயிக்கு உதவியாகவும், அருமையான குணம் கொண்ட ராமாயியை மணம் முடித்தார்… ஆனால், தேச பக்திப் பாடல்களை பாடியபடி, அது தொடர்பான ஓரங்க நாடகங்களை நடத்தியபடி, திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகித்தபடி இருந்ததால், பிரிட்டிஷ் அரசாங்க போலீசாரால் ‘கவனிக்கும்’ லிஸ்ட்டில் வைக்கப்பட்டார் குமரன்.
தேசப்பிதா காந்தியடிகள் திருப்பூர் வந்த போது எடுத்த அரிய படம்.
1932-ம் ஆண்டு தேசமெங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டுக் கொண்டிருந்த பொழுது, மகாத்மா காந்தியடிகளின் ‘ஒத்துழையாமை’ இயக்கம் என்கிற ஆலமரத்தின் வேர்களைத் தேடிப் பிடித்து வெட்ட பிரிட்டிஷ் போலீஸ் தீவிரம் காட்டிய உச்சகட்ட தருணம். ஜனவரி 10, 1932- அன்று மாபெரும் அறப் போராட்டத்துக்கு அழைப்பை விடுத்திருந்தனர் தேச விடுதலைப் போராளிகள்.
பிரிட்டிஷ் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற வளையத்தில் இந்தியா முழுவதும் பலர் கைதாகிக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் திருப்பூரில், போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்ல, ஊரறிந்த தனவந்தரும், பிரபலமான மனிதருமான பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் முன்வருவர் என தெரிந்து அவர்களையும் கைது செய்தது போலீஸ்.
எத்தனை கைது நடந்தாலும் சுதந்திரம் கேட்டுப் போராடும் தேசத்தின் மாவீரர்கள் ஊர்வலத்தை நடத்தியே தீருவது என்று முடிவு கட்டினர். ஊர்ப் பெரியவர் பி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்க, குமாரசாமி(திருப்பூர் குமரன்), ராமன் நாயர், நாச்சிமுத்து கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்து செட்டியார், சுப்புராயன், இன்டர் மீடியட் மாணவர்கள் அப்புக்குட்டி, நாராயணன் ஆகியோர் முன்னணியில் கொடிகளுடன் இட்ட கோஷம் ஊர்வலம் தொடங்கிய இடத்திலேயே அதிர வைத்தது.
போலீசின் பூட்ஸ் கால்களும் நெருங்கி வந்தது.
ஒவ்வொரு போராட்ட வீரர்களாய் தனித்தனியே பிடித்திழுத்து மிதிக்கத் தொடங்கின அதிகார மையத்தின் பூட்ஸ்கள். உடலில் 14 இடத்தில் எலும்பு முறிந்து, கோமா நிலைக்கு முதலில் போனது தலைமை தாங்கிய பி.எஸ். சுந்தரம். அடுத்து கோமா நிலைக்குப் போனது குமரனின் நண்பன் ராமன்நாயர்.
அடுத்தடுத்து ஒவ்வொருவராய் சுருண்டு விழ, ஒருவரின் கையிலிருந்த கொடி மட்டும் தரையைத் தொடாமல் வானம் பார்த்தபடி பட்டொளி வீசியது. அந்தக் கொடி, நம் தேசியக் கொடி…
‘வந்தே மாதரம்’ என்று விடாமல் ஒலித்த குரலிலும், அதை பிடித்திருந்த விரல்களிலும், பிடிக்கும் உறுதியைக் கொடுத்திருந்த இதயத்திலும் மட்டுமே ஓரளவு ஒட்டிக் கொண்டிருந்தது உயிர். அந்த விரல்கள் குமரனின் விரல்கள்.
அந்தக் கொடியைப் பிடித்திருந்த விரல்களை கொடியிலிருந்து பிரிக்க முடியாமல் திணறியது போலீஸ்.
ரத்தக் குளியலில் கிடந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டனர். அங்கே தீவிர சிகிச்சையில் இருந்தது இருவர். ஒன்று ராமன் நாயர், மற்றொருவர் குமரன். மறுநாள் (11.1.1932) ராமன்நாயர் மட்டும் கண் விழித்தார். குமரன் கண் விழிக்கவே இல்லை.
“குமரன் சிகிச்சை பலனின்றி இறந்தார், மற்றவர்கள் மீது போலீஸ் சொன்னதை மீறி பெருங்கலவரம் ஏற்படுத்தும் விதமாக கல்வீசி ‘கொலை முயற்சி’ யில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சிகிச்சை முடிந்ததும் அனைவரும் கைது செய்யப்படுவர். ” என்று அறிவிப்பு வெளியிட்டது பிரிட்டிஷ் போலீஸ்.
“மனமுவந்து உயிர்கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டு வைத்த கொடியது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்துபோக நேரினும்
தாயின்மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்” !
இன்று நாட்டில் பல வண்ணத்தில் கொடிகள், பல எண்ணத்தின் கொள்கைகளை பறந்து, பறந்து பரப்பிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையினை நம் வாரிசுகள் காணக் கூடாது என்றுதானோ என்னவோ, ஆறு வருடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டும் ஒரு வாரிசை இந்த நாட்டுக்கு கொடுக்காமல் போனாரோ குமரன்…!

0 comments:

Post a Comment