Sunday, October 21, 2018

பாராட்டு

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்,

வீடுகளில் பூட்டை உடைத்து அல்லது கதவை உடைத்து வீட்டில் இருக்கிற பொருள், நகை, பணம் ஆகியவற்றை திருடிச் செல்வது அவன் தொழில்.
  சில நேரங்களில் அவனுக்கு திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது, பெரும்பாலும் இரவில் தான் அவன் திருடுவது வழக்கம்.
   ஒரு நாள், ஒரு மாலை நேரம், தெரு வீதியில் சென்று கொண்டிருக்கிறான், எதிரே மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள், அங்கே என்ன நடக்கிறதென்று பார்க்க ஆர்வம், வேகமாக அந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான்.
  அங்கே ஒரு வித்தைக்காரன் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறான், அந்த வித்தைக்காரன், ஒரு இரும்புக் கம்பியை சாதரணமாக வளைத்து சாகசம் பன்னிக் கொண்டிருந்தான், இதைப் பார்த்த அந்த திருடனுக்கு பெரிய ஆச்சரியம் எப்படி இவனால் இந்தக் கம்பியை இவ்வளவு எளிதாக வளைக்க முடிகிறது,
  அவனை தனியே அழைத்து, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று கேட்டான் திருடன்

   வித்தைக்காரன் சொன்னால் ரூ.250 சம்பாதிக்கிறேன் - என்றான்

   உனக்கு 1000 ரூபாய் தினமும் கிடைத்தால் இதே வேலையை வேறொரு இடத்தில் உன்னால் செய்ய முடியுமா - என்று திருடன் கேட்டான்

   நிச்சமாக முடியும் - என்றான் வித்தைக்காரன்

திருடனுக்கு ஏக மகிழ்ச்சி,
  திருடன் திட்டம் தீட்டினான், இடையில் வித்தைக்காரனுக்கு ஏகபோக கவனிப்பு வேற நடக்கிறது, ஏனென்றால், திருடனுடைய திட்டம் நிறைவேறினால் கற்பனையிலும் நினைக்க முடியாத பணம் அவனுக்கு கிடைக்கப் போகிறது,

  திருடனுடைய திட்டப் படி ஒரு நாள் அந்த வித்தைக்காரனை அழைத்து, நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வேன், அங்கே இருக்கும் மூன்று சிறிய கம்பியை வளைத்தாலே போதும் - என்றான்

இவ்வளவுதானே இது ஒரு பெரிய விசயமே இல்லை - என்றான் வித்தைக்காரன்.

 திட்டம் நிறைவேற்றப் போவது ஒரு வங்கி, ஊரே அடங்கிப்போய்விட்டது நடு இரவு, இரண்டு பேரும் திருடனின் மிகத் துல்லியமான திட்டப் படி வங்கியை அடைந்து விட்டனர்.

திருடன் வித்தைக்காரனிடம், அவன் வளைக்க வேண்டிய கம்பிகளை காட்டுகிறான்

அது, அவன் எப்போதும் வளைக்கும் இரும்புக் கம்பியின் Size-ல் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது அவ்வளவு மெல்லியது.

சரி, இதுதான் நீ வளைக்க வேண்டிய கம்பி, நான் அங்கே போய் நின்று கொள்கிறேன், கம்பியை வளைத்து முடித்ததும் என்னைக் கூப்பிடு என்று சொல்லிவிட்டு, யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட சென்று விட்டான்.

வெகு நேரமாகியும், வித்தைக்காரனிடமிருந்து எந்த சமிக்கையும் வரவில்லை, குழப்பமடைந்த திருடன் விதைக்காரனை வந்து பார்க்கும் போது, அவன் எதுவுமே செய்யாமல் அப்படியே நிற்கிறான்

நான் உன்னை இந்த கம்பிகளை வளைத்து வழி ஏற்படுத்திவிட்டு என்னை கூப்பிடச் சொன்னேன், ஏன் அதைச் செய்யவில்லை, உன்னால் இந்த கம்பிகளை வளைக்க முடியவில்லையா? - என்று கேட்டான் திருடன்.

என்னால் இந்த கம்பியை சாதாரணமாக வளைத்து விட முடியும். - என்றான் வித்தைக்காரன்.

பிறகென்ன - திருடன்

நீ சொல்வது சரிதான், எனக்கு கை தட்டி உற்சாகப்படுத்தினால் தான் என்னால் வளைக்க முடியும், கை தட்டுவதற்கு ஆட்களே இல்லையே எப்படி என்னால் இதை வளைக்க முடியும் - என்றான் வித்தைக்காரன்
****   *** ****   **
அவனுடைய வித்தைகளின் சக்தியே கை தட்டி பாராட்டுவதில் தான் இருக்கிறது.

அதனால் தான் திருமுருக கிருபானந்த வாரியார்
" பிறந்தவுடன் - தாலாட்டு
   இறந்தவுடன் - நீராட்டு
   இடைப்பட்ட காலத்தில்
  ஒருவனுக்கு தேவை
   பாராட்டு! பாராட்டு!! பாராட்டு!!!" - என்றார்.

அதனால் ஒருவரை பாராட்ட வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பாராட்டுங்கள்

0 comments:

Post a Comment